UPDATED : அக் 26, 2026 06:57 PM
ADDED : அக் 26, 2026 06:54 PM
சென்னை: ‘பழைய 2,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர், நேரிலோ, தபால் வாயிலாகவோ சமர்ப்பித்து மாற்றிக் கொள்ளலாம்’ என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த, 2023ல் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில், 98.47 சதவீத நோட்டுகள், கடந்த ஏப்ரல், 30க்குள் திரும்ப பெறப்பட்டுள்ளன. எனினும், 5,451 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள், பொதுமக்களிடம் இருந்து இன்னும் திரும்ப பெறப்படாமல் உள்ளன.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள, பழைய 2,000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கியின், 19 வெளியீட்டு அலுவலகங்களில் நேரில் சென்று மாற்றிக் கொள்ளலாம். நேரில் செல்ல முடியாதவர்கள், தபால் வாயிலாகவும், ஆர்.பி.ஐ., அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின்படி, அதற்கான தொகை நேரடியாக உங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
தமிழகத்தில் பழைய, 2000 ரூபாய் நோட்டு வைத்திருப்போர், சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள, ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது தபால் வாயிலாகவோ அனுப்பியோ மாற்றிக் கொள்ளலாம் என, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
