பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு விதிகளில் மாற்றம்
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு விதிகளில் மாற்றம்
ADDED : மார் 07, 2024 11:47 AM
சென்னை:பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு செய்முறைத் தேர்வில், பங்கேற்கும் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வில், கருத்தியல் என்ற தியரி தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், சில நேரங்களில் செய்முறை தேர்வில் பங்கேற்காத நிலை ஏற்படுகிறது. இந்த மாணவர்கள் தியரி தேர்வு மற்றும் அகமதிப்பீடு மதிப்பெண் ஆகியவை சேர்த்து, 35 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்றால், அவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதில்லை. அவர்கள் மீண்டும் தியரி மற்றும் செய்முறை தேர்வில் பங்கேற்றால் மட்டுமே, தேர்ச்சி பெற முடியும் என்ற விதி பின்பற்றப்படுகிறது.
இந்த மாணவர்கள் இனி வரும் காலங்களில், கருத்தியல் தேர்வில் குறைந்தபட்சம், 15 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்று விட்டால், அதன்பின் துணைத் தேர்வின் போது, செய்முறைத் தேர்வில் மட்டும் பங்கேற்றால் போதும். அவர்களது முந்தைய தியரி தேர்வு மதிப்பெண்ணும் சேர்த்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என, தமிழக பள்ளிக்கல்வி துறை அரசாணை பிறப்பித்துள்ளது.

