தமிழகத்தில் ஆட்சி மாற்றம்; 2026ல் தி.மு.க.,வுக்கு முடிவுரை: சொல்கிறார் அண்ணாமலை
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்; 2026ல் தி.மு.க.,வுக்கு முடிவுரை: சொல்கிறார் அண்ணாமலை
UPDATED : மார் 02, 2025 02:44 PM
ADDED : மார் 02, 2025 01:22 PM

ராமநாதபுரம்: '2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். 2026ல் தி.மு.க.,வுக்கு முடிவுரை எழுதப்படும்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: லோக்சபா தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு எந்தவித அறிவிப்பும் செய்யாத நிலையில் அது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்டுவது தேவையில்லாதது. இதனால் தான் பா.ஜ., அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கிறது. எதற்காக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைக்கிறார் என தெரியவில்லை.
தொகுதி எண்ணிக்கை
விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தொகுதி மறுவரையின் போது தமிழகத்திற்கு தொகுதிகளுடைய எண்ணிக்கை குறையாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இவ்வளவு தெரிவித்தும் தேவையில்லாமல் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தொகுதி மறு வரையறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசே உறுதி கூறியும், அதை நம்பாமல் முதல்வர் எந்த அடிப்படையில் தொகுதியில் எண்ணிக்கை குறையும் என்று தெரிவித்து வருகிறார்.
நடவடிக்கை
மீனவர்கள் பிரச்சனையை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் ஏற்கனவே பேசி உள்ளேன். விரைவில் ராமநாதபுரம், புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மீனவர்களுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து மீனவர்கள் கைது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளோம். இந்திய, இலங்கை அரசு இணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மீனவர்கள் போர்வையில் சிலர் கடத்தலில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதால் தான் புதிதாக பொறுப்பேற்ற இலங்கை அரசு தீவிரமாக தமிழக மீனவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. மேடை போட்டு பா.ஜ.,வினரை திட்டுவது தான் தி.மு.க.,வினரின் பிரதான வேலையாக உள்ளது. அமைச்சர் சேகர் பாபு நான் எங்கெல்லாம் வேலை செய்தேனோ அங்கெல்லாம் சென்று சோதனை செய்ய எனது சொந்த செலவில் அனுப்பி வைக்கிறேன்.
முடிவுரை
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். 2026ல் தி.மு.க.,வுக்கு முடிவுரை எழுதப்படும். தி.மு.க.,வை பொறுத்தவரை காலை எழுந்தவுடன் என்னை திட்டுவது தான் முதல் வேலையாக உள்ளது. பொதுக்கூட்டம் போட்டு பா.ஜ.,வை திட்டுவதற்கு தான் தி.மு.க.,வுக்கு நேரம் உள்ளது. மக்கள் பிரச்னை குறித்து பேசுவதற்கு அவர்களுக்கு நேரமில்லை. மும்மொழிக் கொள்கை தொகுதி வரையறை போன்ற தேவையில்லாத பிரச்னைகளை திமுக எழுப்பி வருகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
கேள்வி, பதில்!
அமைச்சர் செந்தில் பாலாஜி உங்களை இனி எப்போதும் நீங்கள் செருப்பு போட முடியாது என விமர்சித்திருப்பது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'நான் அவரைப்போல் சிறைக்கு செல்லவில்லை, செருப்பு போடாமல் தான் நடக்கிறேன். அது ஒன்றும் தவறில்லை' என்றார்.
பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் இருமொழிக் கொள்கையில் படித்த அண்ணாமலை மும்மொழிக்கு ஆதரவு அளிப்பது ஏன் என கூறியதாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'படித்திருந்தால் தெரியும், பாவம் அவர் படிக்காதவர் அவருக்கு என்ன தெரியும்' என அண்ணாமலை விமர்சித்தார்.

