ADDED : மே 28, 2012 11:53 PM
சென்னை : பெயர் மாற்றத்திற்கான விண்ணப்பத்தில், போட்டோ, முகவரி சான்று ஆகியவை இணைக்கும் வகையில், தற்போது மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. நியூமராலஜி, மதமாற்றம் இவற்றின் அடிப்படையில் சிலர், தங்கள் பெற்றோர் வைத்த பெயரை, ஆவணப் பூர்வமாக மாற்றுகின்றனர். இதுதவிர, கல்வி ஆவண சான்றுகளில் உள்ள பெயரில் பிழை இருந்தாலும், திருமணமான பின், பெற்றோர் பெயரை மாற்றி, கணவன் பெயரை சேர்ப்பதற்காகவும், பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை : இவ்வாறு பெயர் மாற்றம் செய்வதற்கு, முறையான விண்ணப்பப் படிவம் அளித்து, உரிய கட்டணம் செலுத்தினால், புதிய பெயர் பதிவு செய்யப்பட்டு, அரசிதழில் (கெசட்) வெளியிடப்படும். அதன் பின், பத்திரிகைகளில் விளம்பரம் அளிக்கப்பட்டால், பெயர் மாற்றம் உறுதி செய்யப்பட்டுவிடும். பெயர் மாற்றம், மத மாற்றத்துடன் பெயரை மாற்றுதல் உள்ளிட்டவற்றிற்கு தனித்தனியான விண்ணப்பங்கள் தமிழ்நாடு எழுது பொருள் அச்சகத்துறையில் வழங்கப் படுகிறது. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கட்டணமாக, 415 ரூபாயை நேரிலோ அல்லது டி.டி.,யாக தபால் மூலமும் செலுத்தலாம்.
புதிய படிவம் : இந்நிலையில், விண்ணப்பப் படிவத்தில் சில மாற்றங்கள் தற்போது செய்யப்பட்டு உள்ளது. புதிய விண்ணப்பப் படிவத்தை நேற்று, சம்பந்தப்பட்ட துறையினர் வெளியிட்டு உள்ளனர். இதில், பழைய படிவத்தை விட கூடுதலாக போட்டோ, பழைய பெயருக்கான சான்று (பிறப்புச் சான்று, பள்ளி மாற்றுச் சான்று) கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். அதே போல், இருப்பிடத்திற்கான சான்று (குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் இவற்றில் ஏதேனும் ஒன்று) இணைக்கப்பட வேண்டும். இதுதவிர, அரசிதழை நேரடியாக, தபால் மூலம் பெறுவதை விண்ணப்பத்தில் குறிப்பிடுவதோடு, விண்ணப்பதாரர் மொபைல் எண்ணையும் குறிப்பிட வேண்டும்.
நிபந்தனை : பிறப்பு, கல்விச் சான்று இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க, அரசு மருத்துவரிடம் உரிய சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரரின் புகைப்படத்தை அதற்கென உள்ள இடத்தில் ஒட்டி, தமிழக, மத்திய அரசின், 'அ' மற்றும் ' ஆ' பிரிவு அலுவலர்களிடம் இருந்து சான்று பெற வேண்டும். அரசிதழை நேரில் பெற விரும்புபவர்கள், ஐந்து நாட்களுக்குள் நேரில் பெற்றுக் கொள்ள வேண்டும். தவறினால் தபாலில் அனுப்பப்படும். சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை, தாயார் மட்டுமே பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்க வேண்டும் என்பது போன்ற, புதிய நிபந்தனைகளும் கூறப்பட்டு உள்ளன. இனி மதமாற்றத்திற்கு விண்ணப்பிப்பவர்கள், புதிய விண்ணப்பம் மூலமே விண்ணப்பிக்க வேண்டும்.