பயங்கரவாத செயலுக்கு சதி 3 பேர் மீது குற்றப்பத்திரிகை
பயங்கரவாத செயலுக்கு சதி 3 பேர் மீது குற்றப்பத்திரிகை
ADDED : பிப் 01, 2024 12:52 AM
சென்னை:தமிழகத்தில் சட்ட விரோதமாக, வடமாநில கூலி தொழிலாளிகள் போல ஊடுருவி, சதி திட்டம் தீட்டி வந்த வங்கதேச வாலிபர்கள் மூவர் மீது, என்.ஐ.ஏ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
வங்கதேசம், தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் இருந்து, ஒரு கும்பல் கூலித்தொழிலாளர்களாக, போலி ஆவணங்கள் வாயிலாக, இந்தியாவின் பல மாநிலங்களில் புகுந்துள்ளதாகவும், சதி செயல்களில் ஈடுபடுவதாகவும், என்.ஐ. ஏ., எனப்படும், தேசிய பலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல்கிடைத்தது.
இதையடுத்து, கடந்தாண்டு நவம்பரில், எல்லை பாதுகாப்பு படையுடன் இணைந்து, தமிழகம் உட்பட, 10 மாநிலங்களில், 55 இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், 44 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழகத்தில், சென்னை புறநகர் பகுதிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை நடந்தது.
மறைமலை நகரில், 'டீ' கடையில் வேலை செய்த, எம்.டி.முன்னா, 26; ஸ்ரீபெரும்புதுார் அருகே, கீழ்படப்பை பகுதியில், ஹோட்டல் ஊழியராக வேலை பார்த்து வந்த சகாபுதீன்,30; புதுச்சேரியில், தனியார் குடோனில் வேலை செய்த எஸ்.கே.பாபு, 30 ஆகியோர் கைதாகினர்.
வங்கதேசத்தை சேர்ந்த மூவரும், திரிபுரா மாநிலத்தவர் போல போலி ஆவணங்கள் வாயிலாக தங்கி இருந்தார். தடை செய்யப்பட்ட, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்பில் இருந்து, பயங்கரவாத செயலுக்கு சதி திட்டம் தீட்டி வந்தது தெரியவந்தது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் மீது, என்.ஐ.ஏ., அதிகாரிகள், சென்னை பூந்தமல்லியில், சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று, இரண்டு குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளனர்.