அறிவியல்பூர்வ ஆய்வு முடிவில் தான் குற்றப்பத்திரிகை: வேங்கைவயல் வழக்கில் ஐகோர்ட்டில் அரசு தகவல்
அறிவியல்பூர்வ ஆய்வு முடிவில் தான் குற்றப்பத்திரிகை: வேங்கைவயல் வழக்கில் ஐகோர்ட்டில் அரசு தகவல்
ADDED : ஜன 28, 2025 03:48 PM

மதுரை: வேங்கைவயல் வழக்கில், அறிவியல் பூர்வ சோதனைக்கு பிறகே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், 196 மொபைல் போன்களும், 87 மொபைல் போன் டவர்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விசாரித்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் கழிந்த நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதில், அதே ஊரை சேர்ந்த மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகளான வி.சி.க., மார்க்சிஸ்ட் கட்சியினரே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அரசு தலைமை வக்கீல் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி விரிவான அறிக்கை தாக்கல் செய்து வாதிட்டார்.
அவரது வாதம்:இந்த வழக்குக்கு இருவருக்குள் ஏற்பட்ட தனி மனித பிரச்னை தான் காரணம். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் கிடையாது. வழக்கில் அறிவியல் பூர்வ சோதனைக்கு பிறகே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கில் மொத்தம் 389 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
196 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் இருந்த படங்கள், வீடியோக்கள், உரையாடல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. சுற்று வட்டாரப்பகுதியில் 87 டவர் லொகேஷனில் ஆய்வு செய்து புள்ளி விவரம் எடுக்கப்பட்டது. குரல் மாதிரி, புகைப்படங்கள் வீடியோக்கள் சேகரிக்கப்பட்டன.
இவற்றின் மூலம் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இவ்வாறு அரசு தலைமை வக்கீல் வாதிட்டார்.