பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அறநிலையத்துறை அழைப்பு
பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அறநிலையத்துறை அழைப்பு
ADDED : ஆக 27, 2026 10:15 PM

சென்னை: 'ஆகம குழுவினரால் பரிசீலனை செய்யப்பட்டுள்ள, 34,971 கோவில்கள் தொடர்பாக, விடுபட்ட விபரங்களை, 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்' என, ஹிந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளின்படி, ஆகம கோவில்களை கண்டறிய, கடந்த 2025 அக்.,6ல், ஐந்து நபர்கள் கொண்ட சிறப்புக் குழுவை அரசு அமைத்தது. மண்டல இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் அளித்த அறிக்கைகளை ஆய்வு செய்த இக்குழு, விடுபட்ட விபரங்கள் மற்றும் பொதுமக்கள் கருத்துக்களை பெற முடிவு செய்துள்ளது.
ஆகம குழுவால் பரிசீலிக்கப்பட்ட, 34,971 கோவில்களின் விபரங்கள், www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் விபரங்கள் ஏதும் விடுபட்டிருப்பின், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, 119, உத்தமர் காந்தி சாலை, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம், சென்னை - 34, என்ற முகவரிக்கு, தபால் வாயிலாகவோ அல்லது இணையதளம் வழியாகவோ, 30 நாட்களுக்குள் தங்கள் கருத்துகளை அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
