ADDED : அக் 29, 2024 05:49 PM

சென்னை: தான் மருத்துவமனையில் இருந்தபோது, தன் மருத்துவ ஆவணங்களில் ஒன்று திருடப்பட்டு விட்டதாகவும், அதில் பொய்யான தகவல்களை சேர்த்து சமூக வலைதளங்களில் பரப்புவதாகவும், சவுக்கு சங்கர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், பெண் போலீசாருக்கு எதிராக அவதுாறு பரப்பியதாக சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். மாநிலம் முழுவதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குண்டர் சட்டத்திலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த வழக்குகள் அனைத்துக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில், அவர் சமீபத்தில் விடுதலையானார். சில வாரம் முன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அப்போது அவரது மருத்துவ ஆவணங்களில் ஒன்று திருடப்பட்டதாகவும், அதில் அவருக்கு எச்.ஐ.வி., பாதிப்பு இருப்பதாக பொய்யான தகவலை சேர்த்து சமூக வலைதளங்களில் பரப்புவதாகவும் சவுக்கு சங்கர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இவ்வாறு பொய்யான தகவல் பரப்பியவர்கள் மீது, சிவில் மற்றும் கிரிமினல் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்படும் என்று சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.