UPDATED : நவ 14, 2026 07:45 PM
ADDED : நவ 14, 2026 07:45 PM
சென்னை: 'செக்' மோசடி வழக்கில், மோசடியாக ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்க கோரி, நடிகர் விமல் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில், 'களவானி' படம் வாயிலாக பிரபலமானவர் விமல். இவர், 'மன்னர் வகையறா' என்ற படத்தை தயாரிக்க, 'அரசு பிலிம்ஸ்' நிறுவனத்திடம், 4.50 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
தியேட்டர்களில் படம் வெளியானதும், கடன் தொகையை திருப்பி கொடுக்கும் வகையில், 'செக்' வழங்கி உள்ளார். ஆனால், வங்கியில் பணம் இல்லாமல், காசோலை திரும்பி வந்தது.
இதையடுத்து, அரசு பிலிம்ஸ் உரிமையாளர் கோபி சார்பில், நடிகர் விமலுக்கு எதிராக, வழக்கறிஞர் ஆர்.வெங்கடேஷ் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சென்னை மாவட்ட 11வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம், விமலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும் காசோலை தொகையை, கோபிக்கு திருப்பி கொடுக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், தனக்கு எதிரான 'செக்' மோசடி வழக்கில் குறிப்பிட்டுள்ள, காசோலை விபரங்கள், உண்மை ஆவணங்களில் இல்லாதவை; மோசடியான ஆவணங்கள் தாக்கல் செய்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, கோபிக்கு எதிராக, நடிகர் விமல், சென்னை சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால், பிரதான வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு விட்டதால், ‘மனு விசாரணைக்கு உகந்ததல்ல’ என, திருப்பி அனுப்பி, சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்து, தன் மனுவை எண்ணிட்டு விசாரிக்கும்படி, சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு உத்தரவிட கோரி, நடிகர் விமல் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், ‘‘சிறு வழக்குகளை விசாரிக்கும், நீதிமன்ற உத்தரவில், எந்த சட்ட விரோதமும் இல்லை,’’ எனக் கூறி, நடிகர் விமலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
