செக்போஸ்ட் இருந்தும் பயனில்லை; தமிழகத்தில் குவியும் கேரள கழிவுகள்!
செக்போஸ்ட் இருந்தும் பயனில்லை; தமிழகத்தில் குவியும் கேரள கழிவுகள்!
ADDED : டிச 16, 2024 10:08 PM

திருநெல்வேலி: கேரள மாநில புற்றுநோய் மருத்துவமனை கழிவுகள், மருந்து பொருட்கள் மூட்டை மூட்டையாக லாரிகளில் கொண்டு வந்து திருநெல்வேலி அருகே வீசப்பட்டுள்ளன.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகள், கனிம வளங்கள், பால் அத்தியாவசிய பொருட்கள் சிமெண்ட் போன்றவை அனுப்பப்படுகின்றன.
ஆனால் கேரளாவிலிருந்து திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களில் லாரி லாரியாக இறைச்சி கழிவுகள், மருத்துவக் கழிவுகள் குப்பைகளை மூட்டைகளில் கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
நாகர்கோவில் வழியாக வரும் மூட்டைகளை திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், பணகுடி, நாங்குநேரி வட்டாரங்களில் கொட்டினர்.தென்காசி வழியே வரும் லாரிகளில் மருத்துவக் கழிவுகளை கடையம், ஆலங்குளம் வட்டாரங்களில் கொட்டினர்.
நேற்று திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூர் பகுதியில் ஒரு குளம் முழுவதும் நூற்றுக்கணக்கான மூட்டைகளில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.
அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்தானம் கூறுகையில், இரவு நேரம் தென்காசி வழியே வரும் லாரிகள் சீதபற்பநல்லூர் பகுதியில் வலது புறம் திரும்பி நடுக்கல்லூர் வட்டாரங்களில் குளங்களில் கொட்டி செல்கின்றனர்.
குறிப்பாக இந்த பகுதியில் உள்ள ஆலைகளுக்கு சரக்குகளை ஏற்ற கேரளாவில் இருந்து வரும்போது இத்தகைய கழிவுகளை ஏற்றி வருகின்றனர்.
இந்த கழிவுகளில் அனைத்தும் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவ கழிவுகள் மற்றும் பொருட்களாகும். எனவே இதனை செங்கோட்டை சோதனை சாவடியில் தடுத்து நிறுத்த வேண்டும். திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
கேரளாவின் உயிர் மருத்துவம், உணவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், குறிப்பாக திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் (ஆர்சிசி) மற்றும் க்ரெடன்ஸ் தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் இருந்து, கொடகநல்லூர் மற்றும் பழவூர் கிராமங்களில் உள்ள பட்டா நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் உட்பட பல இடங்களில் கொட்டப்பட்டுள்ளது.
நிலத்தின் மேற்பார்வையாளர் சந்தானம், முதலமைச்சரின் சிறப்புப் பிரிவு மற்றும் சுத்தமல்லி காவல்துறைக்கு அளித்த புகார்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறினார். பயோமெடிக்கல் கழிவுகளால் மாசுபட்ட தண்ணீரை குடித்து, கால்நடைகள் கழிவுகளை சாப்பிட்டு நோய்வாய்ப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.