செல்லமே: வெளியூரில் இருந்தாலும் வீடியோகாலில் கொஞ்சலாம்!
செல்லமே: வெளியூரில் இருந்தாலும் வீடியோகாலில் கொஞ்சலாம்!
UPDATED : மார் 02, 2024 03:50 PM
ADDED : மார் 02, 2024 02:29 AM

பங்ஷன், மீட்டிங், அவுட்டிங்னு வெளியூர் கிளம்புறத்துக்கு முன்னாடி, பெட்ஸ்களை எப்படி எடுத்துட்டு போறது எங்க பாதுகாப்பா தங்க வைக்கறதுங்கிற கேள்வி தான் முன்னாடி நிக்கும். இனி அந்த கவலையே வேண்டாமுங்கோ என்கின்றனர், கோவையில் இயங்கும், 'பர்ரீ பிரண்ட்ஸ் பர்ர் கேஸ்டில்' ஓனர்ஸ் விக்னேஷ், ரேவதி.
வட்டமலையாம்பாளையத்தில் உள்ள 'பர்ரீ பிரண்ட்ஸ் பர்ர் கேஸ்டிலில்' பெட்ஸ்களுக்கான டே கேர், போர்டிங் வசதி, குரூமிங், போட்டோ பூத், பிளே ஏரியான்னு, ஓனர் தேடுறது எல்லாமே இருக்கு. வண்டிகளோட ஹாரன் சத்தம் இல்லாம நேச்சர் சூழல்ல சி.சி.டி.வி., கேமரா கண்காணிப்புல இயங்குது.
ரொம்ப நாள் போர்டிங்குல பெட்ஸ்களை விட்டுட்டு போறவங்க, எப்போ வேணும்னாலும் அவங்க செல்லத்தோட, வீடியோகாலில் பேசுறதுக்கும், விளையாடுறத பாக்கறதுக்கும், 'டூ வே டிராக் கேமரா' இருக்கு. இங்க கூண்டுல, கேஜ்ல, பெட்ஸ்களை அடைச்சு வைக்கமாட்டோம். விளையாட பிளே ஏரியா இருக்கு.
வீட்டுல எப்படி சுதந்திரமா இருக்காங்களோ அப்படி, இங்கயும் இருக்கற மாதிரி தான் எல்லா வசதிகளும் ஏற்படுத்தியிருக்கோம். டே கேர்ல இருக்கற பெட்ஸ்களோட சேட்டைகளையும், வீடியோ எடுத்து ஓனர்களுக்கு அப்டேட் செய்றோம். டயட் முறைகளை ஓனர்களே தேர்வு செய்யலாம். போட்டோ பூத் பகுதியில், உங்க பெட்ஸ்களோட வித்தியாசமாக 'கிளிக்' செய்யலாம்,'' என்றார் கேஸ்டில் உரிமையாளர் விக்னேஷ்.
இதுதவிர, பெட்ஸ்களுக்கு நகம், முடி வெட்டுவது, காது சுத்தம் செய்து, குளிப்பாட்டுவது என குரூமிங் செய்யப்படுகிறது. ஒட்டுண்ணி, பொடுகுக்கு ட்ரீட்மெண்ட்டும் உண்டு. வீட்டிற்கே நேரில் வந்தும், பெட்ஸ்களை அழகுப்படுத்துகின்றனர். இதற்கு பிரீட் பொறுத்து, கட்டணம் மாறுபடும். கூடுதல் தகவலுக்கு, 80569 70020 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பெட் லவ்வர்ஸ்க்கு ட்ரீட் கொடுக்கற மாதிரி கோவையை சேர்ந்த டாக், ரெமோவை நடிக்க வைச்சு, 'ஸ்கூபி'ங்கற மியூசிக் ஆல்பம், சென்னையில வெளியிட்டு இருக்காங்க.
'ஸ்கூபி...' இது, மியூசிக் ட்ரீட்
''இந்த உலகத்துல எந்த எதிர்பார்ப்பும் இல்லாம கிடைக்கற அன்பு, செல்லப்பிராணிகளோடது மட்டும் தான். இதை மையப்படுத்தி பெட் வளர்ப்பில் அனுபவமில்லாத ஹீரோவோட ஆக்சிடன்ட்டா கனெக்ட் ஆகுற ஒரு 'டாக்'கை வைத்து, கான்செப்ட் உருவாக்கினேன்.
'நக்லைட்ஸ்' யூ-டியூபர் அருண்குமாரோட, ஹீரோவா இணைஞ்சிருக்கு, கோவையை சேர்ந்த உமாமகேஸ்வரனோட செல்லப்பிராணி ரெமோ. இது, 'டிரெயின்டு டாக்'ங்கறதால ஷூட் பண்றதுக்கு, எந்த சிரமமும் ஏற்படலை. இந்த கான்செப்ட்டுக்கு ஏத்தமாதிரி, ரகுராம கிருஷ்ணா, யூத்புல்லா மியூசிக் கம்போஸ் பண்ணியிருக்கார்.
கோவை, திருச்சூர் தான், ஆல்பத்தோட ஷூட்டிங் ஸ்பாட். எல்லாரும் ரசிக்கும்படியா, என்னோட காட்சிகள உருவாக்கியிருக்கார் கேமராமேன், வைசக் பவித்ரன். 'மியூசிக் ஆப்', சீசா (seesaw) யூ-டியூப் சேனல்ல, இந்த பாட்டை கேட்டு, பாத்து ரசிக்கலாம்,'' என்கிறார் இயக்குனர் மகேஸ்வரன்.
ரத்தன் டாடாவின் விலங்கு மருத்துவமனை
தொழிலதிபர் ரத்தன் டாடாவின் கனவு திட்டமான விலங்குகளுக்கான நாட்டின் மிகப்பெரிய மற்றும் பிரத்யேக மருத்துவமனை மும்பையில் விரைவில் திறப்பு விழா காண தயாராக உள்ளது. சுமார் 2.2 ஏக்கர் பரப்பளவில் ரூ.165 கோடி செலவில், 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் மேம்பட்ட கட்டமைப்பு வசதிகளை இம்மருத்துவமனை கொண்டுள்ளது. இப்போதைக்கு நாய்கள், பூனை, முயல் மற்றும் பிற சிறிய விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இதில், 200 நோயாளிகள்(விலங்குகள்) தங்கும் வசதி உள்ளது.
செல்லப்பிராணிகள் நம் குடும்பத்தின் அங்கம். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்து, இப்பிராணிகள் வேறுபட்டதல்ல. எனது வாழ்நாளில் ஏராளமான செல்லப்பிராணி களின் பாதுகாவலராக இருந்ததால், இந்த மருத்துவமனை கட்ட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன்'' என்கிறார் விலங்கு பிரியரான, 86 வயது ரத்தன் டாடா. ரோட்டில் காயமடைந்த, கைவிடப்பட்ட நாய்கள் போன்ற செல்லப்பிராணிகளின் அவஸ்தையை பார்த்து மனமுடைந்த இவருக்கு, இப்படிப்பட்ட மருத்துவமனையை எழுப்பும் எண்ணம் உதித்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு 'வெப் டிசைனரின்' நெடுங்கனவு!
மனிதம் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது; 23 வயதில், 283 ஆதரவற்ற விலங்குகளை காப்பாற்றி, காப்பகத்தில் தங்க வைப்பது சாதாரண காரியமல்ல. பிற உயிர்களை அரவணைத்து காப்பாற்றி வருகிறார் சென்னை, போரூரை சேர்ந்த வெப் டிசைனர் சாய்விக்னேஷ்.
அவர் கூறியது: சின்ன வயசுல இருந்தே தெருநாய்களுக்கு சாப்பாடு போடுவேன். என் தாத்தா, பாட்டி தான் சமைச்சு கொடுப்பாங்க. அவர்களை போலவே நானும்... எங்க வீட்டில் நான் ஒரே மகன். கடந்த 2015ல் மிக்ஜாம் புயல் சென்னைவாசிகளோட இயல்பு வாழ்க்கைய தலைகீழா புரட்டி போட்டுச்சு. மக்களுக்கு உதவி செய்ய பலரும் களமிறங்கினாங்க. நான் பராமரிப்பின்றி பரிதவித்த தெருநாய்களை தேடி அலைஞ்சிட்டு இருந்தேன். வெள்ளத்துல தத்தளிச்ச 20 நாய்களை வீட்டிற்கு கொண்டு வந்தேன்.
அடுத்த ஒரே மாசத்துலயே ஹவுஸ் ஓனர்ல இருந்து அக்கம்பக்கத்துல இருக்கவங்க, பால்காரர், கீரை விக்கிறவர்னு எல்லாரும் கம்ப்ளைண்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. வீடு மாத்துற படலம் தொடர்ந்துக்கிட்டே இருந்துச்சு. இதுக்கு இடையில, தெருவுல தனியா அடிப்பட்டு கிடக்குற மாடு, ஆடு, குதிரைன்னு பல விலங்குகளயும் மீட்டேன்.
காயத்துக்கு மருந்து வாங்கித்தர மட்டும் தான் என்னால முடிஞ்சுது. இவைகளை தனியா ரோட்டுல விட்டுட்டு போகவும் முடியல. என்னோட பணிகளை பார்த்து திருநின்றவூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சிவமணி, திருவள்ளூர் மாவட்டம், சென்றாயன்பாளையத்துல இருக்க தன்னோட எட்டு ஏக்கர் நிலத்தை இலவசமா கொடுத்தார்.
என்னோட பூர்வீக வீட்டை விற்று கிடைச்ச பணத்துல விலங்குகள் காப்பகம் கட்டுனேன். இப்போ இங்க 130 மாடு, பசு, காளை, எருமைகள், 111 தெருநாய், 27 ஆடு, 9 கோழி, சேவல், 2 குதிரை என மொத்தம் 283 விலங்குகள் இருக்கு. தெருவோரங்கள்ல தனிச்சுவிடப்படுற விலங்குகள் எங்கிருந்தாலும் போன் மூலமா தகவல் தெரிவிச்சா உடனே மீட்டு, தங்க வைச்சிக்கிறேன்.
ஒவ்வொரு விலங்குக்கும் வெவ்வேறு உணவுமுறை, பராமரிப்பு, குணாதிசயம் இருக்கும். 15 பேர் வேலை செய்றாங்க. ஒரு டாக்டர் தினமும் வந்து விசிட் அடிப்பார். நிறைய தன்னார்வலர்கள் செலவுக்கு பணம் கொடுக்குறாங்க. பட்ஜெட் போட்டு காப்பகத்த நடத்த முடியாது. எதிர்பார்க்காத செலவுகள் வரும்போதெல்லாம் யாராவது உதவி செய்றாங்க... என்றார்.
இவரை தொடர்பு கொள்ள: 89393 20846

