UPDATED : பிப் 24, 2024 01:22 PM
ADDED : பிப் 24, 2024 02:42 AM

ஒரு பெட் வளர்த்தா கிடைக்கற அனுபவம் வேற லெவல். வீட்டுல ஒருத்தரா மாறிடுற பெட்ஸ்சோட ஊர் சுற்றுவது, ஷாப்பிங் செய்வது தாண்டி, குரூமிங் செய்வது, ஷோக்களுக்கு அழைச்சிட்டு போறது தான் டிரெண்டாகுது. அங்க, நிறைய பெட் பேரன்ட்ஸ் மீட் பண்றதோட, மத்த பிரீட் பத்தி, தன்னோட செல்லத்துக்கு இருக்கற டேலண்டையும் எக்ஸ்போஸ் பண்றாங்க. 'கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப்' சமீபத்துல கோவை அவிநாசிரோடு, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில, டாக் ஷோ நடத்துனாங்க. 250க்கும் மேற்பட்ட டாக்ஸ் இந்த ஷோக்கு வந்துச்சு. இதுல, க்யூட்டா போஸ் கொடுத்த பப்பிஸ் இதோ:
ஜாக்கிரதை... நமக்கும் பரவும்!
நாய்களை வீட்டுச்சூழலில் வளர்க்கும் போது தவறான உணவுப்பழக்கம், சுற்றச்சூழல் பாதிப்புகளால் தோல் நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உணவுமுறைகளை பொறுத்தவரை, மனிதர்கள் சாப்பிடும் உப்பு, சர்க்கரை, காரம், பதப்படுத்தப்பட்ட உணவுகளை நாய்க்கு கொடுக்கக்கூடாது. அவை தங்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். குப்பைகளில் இருந்து தான் உண்ணிகள் உருவாகும்.
![]() |
நாய்களின் தோல்வியாதிக்கு உண்ணிகள், பேன் பூச்சிகள், நுழையான்களே காரணம். இவை, முடிக்கு அடியில் தோலில் ஒட்டிக்கொண்டு ரத்தத்தை உறிஞ்சும். தோல் சிவப்பாதல் பரு, சொரி, தடிப்பு ஏற்படுதல், முடி உதிர்தல் போன்ற அறிகுறிகள் மூலம், தோல் நோய் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். நாய்களை தாக்கும் சில பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதால் மருத்துவ சிகிச்சை அளிப்பது அவசியம். மேலும் இதை கவனிக்காமல் இருந்தால், நாய்களுக்கு ரத்தசோகை ஏற்பட்டு, இறக்கவும் வாய்ப்புள்ளது.
மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய கால இடைவெளியில் உண்ணி மருந்துகள் அளித்தல், குடல்புழு நீக்கம் செய்ய வேண்டும். நாய்களை 15 நாட்களுக்கு ஒருமுறை மென்மையான சோப்பு, ஷாம்புகளை பயன்படுத்தி குளிப்பாட்டி விடுதல் அதன் முடியை சீவி விடுவது அவசியம்.
-பெருமாள்சாமி, மண்டல இணை இயக்குனர், கால்நடை பராமரிப்பு துறை, கோவை.
சீறிப்பாயுது குதிரை ஜீவிகாவுக்கு அது குழந்தை
'சலோ மாயா!'ங்கற குரல் கேட்டதும் படுத்திருந்த குதிரை, விர்ரென எழுந்து தேகம் சிலிர்க்க ஒரே பாய்ச்சலில் பாய்ந்து வந்து நிற்க, சினிமா ஹீரோ ஸ்டைலில் தாவியேறி அதன் முதுகில் அமர்ந்து ஒரு ரவுண்ட் வந்தார் ஜீவிகா.
கோவை, சத்தியமங்கலம் ரோடு பகுதியைச் சேர்ந்த இவர், ஐ.டி., நிறுவன ஊழியர். ஒய்யாரமாய்ஒரு சவாரி செய்துவிட்டு, அசால்ட்டாய் எட்டி குதித்து கீழே இறங்கிய அவர் கூறியதாவது:
என் தாத்தா, அப்பா எல்லாருமே குதிரை வளர்த்துருக்காங்க. எனக்கும் குதிரை வளர்ப்பில் ஆர்வம். ஆறாவது படிக்கும் போது, அப்பா லோகநாதன் தான் குதிரையில ரைடு போறதுக்கு சொல்லிக்கொடுத்தார்.
![]() |
நான் பத்தாவது படிக்கும் போது, மாயா (குதிரை) எங்க வீட்டுக்கு வாங்கிட்டு வந்தாங்க. உத்தரபிரதேச மாநிலத்துல இருந்து வந்ததால ஹிந்தில பேசுனா உடனே ரியாக்ட் பண்ணும். மியூசிக் ஏத்தமாதிரி நல்லா டான்ஸ் ஆடும். கூட்டத்தை பாத்தா மாயா கையில பிடிக்க முடியாத அளவுக்கு, ஹாப்பியாகிடும்.
மியூசிக் போட்டதும் டான்ஸ் ஆடுற மாயா, அது மேல ஏறி, சலோன்னு சொன்னா ரைடுக்கு தயாராகிடும். சலோன்னா ஸ்பீடாவும், 'பஸ்'னா பொறுமையாவும் ஓடனுங்கிறது, மாயாவோட 'கோட் வேர்டு'. குழந்தை மாதிரி க்யூட்டா ரியாக்ட் பண்ற மாயாவுக்கு, இப்போ ஒன்பது வயசு. என்னோட பேமிலியில ஒருத்தியா தான் இத ட்ரீட் பண்ணுவேன், என்றார்.
மாயான்னு ஏன் பேரு வச்சீங்கன்னு கேட்டதும்,'' ராஜஸ்தான் மாநிலத்தில், குதிரை பந்தய போட்டியில் வெற்றி பெற்ற போது, உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி பரிசு கொடுத்தாங்க. அவங்க நினைவா, இதுக்கு மாயான்னு கூப்புடுறோம்,'' என்றார்.
பேசிக்கொண்டு இருக்கும் போதே, 'ராஜாவுக்கு ராஜா நான்டா' ங்கற பாட்டை மொபைலில் ஒலிக்க விட்டதும், இரு கால்களையும் அந்தரத்தில் துாக்கியபடி, கனைத்து கொண்டே ஸ்டெப் போட ஆரம்பித்துவிட்டது!
சரிதான், இவங்க ஹார்ஸ்ல வேலைக்கு போனா, ஐ.டி., நிறுவன ஆபீஸ் வளாகத்துல 'பார்க்கிங்' பிரச்னை வந்துடாதா?
செல்லப்பிராணிகள் அணிவகுப்பு
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், மலர் கண்காட்சி நடக்கிறது. இதன் ஒருபகுதியாக, 24,25ம் தேதிகளில், செல்லப்பிராணிகள் அணிவகுப்பு, காலை 9:00-11:00 மணி மற்றும் மாலை 4:00-6:30 மணி வரை நடப்பதால், மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!