ADDED : ஜன 21, 2024 02:29 AM
சென்னை : சென்னை - கோவாவுக்கு மீண்டும் ரயில் சேவை துவங்க, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் இருந்து கோவா செல்லும் வகையில், சென்ட்ரல் - வாஸ்கோடகாமா ரயில் நிலையத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன் வாரந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
கொரோனா பாதிப்பின் போது, இந்த சேவை நிறுத்தப்பட்டது; மீண்டும் துவங்கப்படவில்லை.
சென்னையில் இருந்து கோவாவுக்கு நேரடி ரயில் சேவை இல்லாமல், பயணியர் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து, பயணியர் சிலர் கூறுகையில், 'சுற்றுலா தலமான கோவா செல்ல, சென்னையில் இருந்து நேரடி ரயில் சேவை இல்லை. கோவாவுக்கு செல்ல மூன்று ரயில்கள் மாற வேண்டிய நிலை இருக்கிறது. எனவே, சென்னை - கோவா நேரடி ரயில் சேவையை மீண்டும் துவங்க வேண்டும்' என்றனர்.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'பயணியரிடம் போதிய அளவில் வரவேற்பு இல்லாததால், அந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. எனவே, தற்போது பயணியரின் தேவை குறித்து ஆராய்ந்து, மீண்டும் ரயில் சேவை துவங்க பரிசீலனை செய்யப்படும்' என்றனர்.

