நாய்க்கு தெரியுமா தேங்காய் ருசி; நாட்டுக்கு சொல்லுது சென்னை மாநகராட்சி; எல்லாம் கார் பந்தயம் செய்யும் மாயம்!
நாய்க்கு தெரியுமா தேங்காய் ருசி; நாட்டுக்கு சொல்லுது சென்னை மாநகராட்சி; எல்லாம் கார் பந்தயம் செய்யும் மாயம்!
UPDATED : செப் 01, 2024 12:29 PM
ADDED : செப் 01, 2024 12:21 PM

சென்னை: சென்னையில் நடக்கும் பார்முலா கார் பந்தயத்தின் அருமை பெருமைகளை அறியாமல், குறுக்கே சுற்றித்திரியும் தெருநாய்களை மாநகராட்சி ஊழியர்கள் வலை வீசி பிடித்து வருகின்றனர்.
பெரும் எதிர்பார்ப்பு மற்றும் கடும் விமர்னசங்களுக்கு இடையில் சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் தொடங்கி உள்ளது. 2ம் நாளாக இன்றும் நடக்கிறது. நேற்றிரவு பந்தயத்தின் போது சாலையின் குறுக்கே நாய் புகுந்து இடையூறு ஏற்படுத்தியது. அந்த நாயை பிடித்த சென்னை மாநகராட்சி ஊழியர்கள் பின்னர் அதனை அப்புறத்தினர்.
இந்நிலையில் இன்றைய போட்டியின் போது மீண்டும் நாய்கள் தொல்லை செய்தால் என்ன செய்வது என்ற கேள்விகள் பரவலாக எழுந்தன. இதையடுத்து கார் பந்தயம் நடக்கும் பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை மாநகராட்சி அதிகாரிகள் பிடிக்க உத்தரவிட்டுள்ளனர். வேறு வழியில்லாத மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி ஆங்காங்கே சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து வருகின்றனர்.
இவ்வாறு பிடிக்கப்படும் தெருநாய்கள் அனைத்து போட்டிகளும் முடிந்த பின்னர், அதே இடத்தில் மீண்டும் கொண்டு வந்து விடப்படும் என்று தெரிகிறது.
சென்னையில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை வீதியில் செல்வோரை விரட்டி விரட்டிக் கடிக்கின்றன. கடிபட்ட மக்கள் மருத்துவமனைக்கு அலைவது அன்றாடம் நடக்கிறது. அப்போதெல்லாம் அவசர நடவடிக்கை எதுவும் எடுக்காத மாநகராட்சி, இப்போது கார் பந்தயத்துக்கு இடையூறு என்றதும், ஓடியாடி நாய் பிடிக்கிறது. மக்களை காட்டிலும் கார் பந்தயம் தான் முக்கியம் என்று இதன் மூலம் நாட்டுக்கு மக்களுக்கு சிறப்பான செய்தியை சென்னை பெருநகர மாநகராட்சி சொல்கிறது என்று வருத்தப்படுகின்றனர், அப்பாவி மக்கள்.