மறைமுகமாக மதுவுக்கு விளம்பரம்; தமிழக அரசே தடையை மீறலாமா: தட்டிக்கேட்கிறார் அன்புமணி!
மறைமுகமாக மதுவுக்கு விளம்பரம்; தமிழக அரசே தடையை மீறலாமா: தட்டிக்கேட்கிறார் அன்புமணி!
ADDED : ஆக 31, 2024 12:58 PM

சென்னை: சென்னையில் பார்முலா கார் பந்தயப் பாதையில் இடம்பெற்றுள்ள மறைமுக மதுபான விளம்பரங்களை அகற்ற வேண்டும் என்று பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் சுருக்க விவரம் வருமாறு: சென்னையில் தொடங்கியுள்ள பார்முலா 4 கார் பந்தயப் பாதையான தீவுத்திடலை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் பார்வையில் பளிச்சென்று படும் வகையில் பிரபல மதுபான விளம்பரங்கள் மிக அதிக அளவில் வைக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய விளம்பரங்கள் அதை பார்ப்போருக்கு அருந்த வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். மது வகைகளுக்கு செய்யப்படும் இந்த விளம்பரத்தை, பந்தயத்தை நடத்தும் அமைப்பும், தமிழக அரசும் அனுமதித்திருப்பதும் கண்டிக்கத்தக்கது.மறைமுக விளம்பரம்
ஒரு மதுபானம் என்ன பெயரில் விற்பனை செய்யப்படுகிறதோ, அதே பெயரில் குடிநீர், சோடா, சர்க்கரை ஆகிய பொருட்களை சந்தையில் அறிமுகம் செய்து அவற்றின் பெயரில் மது விளம்பரங்களை செய்கின்றன. ஆனால், மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணைய விதிகளின்படி மது விளம்பரங்களை மறைமுகமாகவும் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆணையம்
சோடா விளம்பரம் என்ற பெயரில் மது விளம்பரங்களையும், பான் மசாலாக்கள் பெயரில் புகையிலை விளம்பரங்களையும் மறைமுகமாக செய்ய தடை விதித்து மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் 2022ம் ஆண்டு ஜூனில் உத்தரவிட்டிருக்கிறது. இவ்வளவு கட்டுப்பாடுகளை புறக்கணித்து விட்டு, பல்லாயிரக்கணக்கானவர்கள் பார்வையாளர்களாக பங்கேற்கும் ஒரு விளையாட்டுப் போட்டியில் மறைமுகமாக மது விளம்பரங்கள் செய்யப்படுவதையும், அதை தடுக்க வேண்டிய தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் அனுமதிக்க முடியாது.நடவடிக்கை எடுங்கள்
பொது நலன் கருதியும், மக்களைக் காக்கும் கடமையை நிறைவேற்றும் வகையிலும் பார்முலா 4 கார் பந்தயப் பாதையில் வைக்கப்பட்டுள்ள மறைமுக மதுபான விளம்பரங்களை உடனடியாக அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரி உள்ளார்.