வெளிநாட்டில் ஆய்வு பணி செய்த ஓராண்டை பேராசிரியரின் பணி நாட்களாக கருத உத்தரவு
வெளிநாட்டில் ஆய்வு பணி செய்த ஓராண்டை பேராசிரியரின் பணி நாட்களாக கருத உத்தரவு
ADDED : ஆக 26, 2024 06:49 AM

சென்னை: வெளிநாட்டில் ஆய்வுப்பணி மேற்கொண்ட பேராசிரியரின் ஓராண்டுக் காலத்தை, பணி நாட்களாகக் கருதும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை பாரதியார் பல்கலையில், கணிதத் துறையில் உதவிப் பேராசிரியராக ராக்கியப்பன் என்பவர், 2011ல் நியமிக்கப்பட்டார். 2015ல் இவருக்கு பணி வரன்முறை செய்யப்பட்டது.
கொரியா நாட்டில் உள்ள ஆராய்ச்சி மையம், ஓராண்டு வரை ஆய்வு பணியாற்ற, ராக்கியப்பனுக்கு அழைப்பு விடுத்தது. பல்கலை பதிவாளரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றார்.
ஆனால், ஓராண்டு காலத்தை பணி நாட்களாகக் கணக்கிட முடியாது என்றும், 'பென்ஷன்' உள்ளிட்ட இதர பலன்களுக்கு அந்த நாட்களை கணக்கிட முடியாது என்றும், பல்கலை நிர்வாகம் தெரிவித்தது.
பல்கலையின் இந்த உத்தரவை எதிர்த்து, ராக்கியப்பன் மனு தாக்கல் செய்தார். அவர் சார்பில், வழக்கறிஞர் கவிதா ராமேஸ்வர் ஆஜராகி, ''பல்கலையின் பணி நிபந்தனைகளின்படி, ஊழியர்கள் சம்பளம் இல்லாமல், 5 ஆண்டுகள் விடுமுறை எடுக்கலாம். தமிழ்நாடு விடுமுறை விதிகளின்படி, வெளிநாட்டில் பணிபுரியும் நாட்களை, பென்ஷன் கணக்கிடுவதற்கான பணி நாட்களாக எடுத்துக் கொள்ளலாம்,'' என்றார்.
மனுவை விசாரித்த, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வதற்காக, ஆய்வுப் பணிக்காக ஓராண்டு வெளிநாடு சென்றுள்ளார்; அனுமதியை பல்கலை நிர்வாகம் வழங்கி உள்ளது.
அதற்கான சம்பளம் அல்லது சலுகைகள் பெற, அவருக்கு உரிமை இல்லை; சம்பளம் இல்லாத நாட்களாக தான் அவை கருதப்படும். ஆனால், அந்த நாட்களை பணிக்காலமாகவே பரிசீலிக்க வேண்டும். பணி இடைவெளியாக எடுத்துக் கொள்ள முடியாது.
எனவே, ஓராண்டுக் காலத்தை பணி நாட்களாக சேர்க்க முடியாது என்ற பல்கலையின் முடிவை ஏற்க முடியாது; சம்பளம் இல்லாத நாட்களாக எடுத்துக் கொள்ளலாமே தவிர, பணி நாட்களாக அதை சேர்க்க வேண்டும்.
அதனால், பணி நாட்களாக சேர்த்து மனுதாரருக்கு உள்ள உரிமையின்படி, சலுகைகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

