கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலியே!: ஜாபர் சேட்டுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெற்றது ஐகோர்ட்
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலியே!: ஜாபர் சேட்டுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெற்றது ஐகோர்ட்
UPDATED : ஆக 23, 2024 06:07 PM
ADDED : ஆக 23, 2024 03:25 PM

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஜாபர் சேட்டுக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை நேற்று முன்தினம்( ஆக.,21) சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. இன்று இந்த உத்தரவை ஐகோர்ட் திரும்ப பெற்றது.
கடந்த 2006 - 11ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின்போது, சென்னை, திருவான்மியூரில் வீட்டுவசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாக பெற்றதாக, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஜாபர் சேட், அவரது மனைவிக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில், ஜாபர் சேட், அவரது மனைவிக்கு எதிராக, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், 2020ல் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இதை ரத்து செய்யக் கோரி, ஐகோர்ட்டில் ஜாபர் சேட் மனுத் தாக்கல் செய்தார். இதனை நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வு விசாரித்தது.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், ''மனுதாரருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கை, 2019ல் உயர் நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. அந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்ததால், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அதை ரத்து செய்யலாம்,'' என்றார். இதை ஏற்றுக்கொண்டு, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை, நீதிபதிகள் ரத்து செய்தனர்.
இந்நிலையில், இந்த உத்தரவை திரும்ப பெற்ற நீதிபதிகள், இவ்வழக்கில் சில விளக்கங்களை பெற வேண்டி உள்ளதால், 21ம் தேதி பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்ததுடன், வழக்கு விசாரணையை ஆக.,28 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்..