கொஞ்சம் ஓவரா போயிட்டோம்... எல்லோரும் மன்னிச்சுடுங்க; வேளச்சேரி சந்திரமோகன் வீடியோ ரிலீஸ்!
கொஞ்சம் ஓவரா போயிட்டோம்... எல்லோரும் மன்னிச்சுடுங்க; வேளச்சேரி சந்திரமோகன் வீடியோ ரிலீஸ்!
UPDATED : அக் 21, 2024 07:00 PM
ADDED : அக் 21, 2024 06:35 PM

சென்னை: சென்னையில், நள்ளிரவில் போலீசாரிடம் ஆபாசமாக பேசி வம்பிழுத்த ஜோடி கைது செய்யப்பட்டனர். 'கொஞ்சம் ஓவரா போயிட்டோம். எல்லோரும் மன்னிச்சுடுங்க' என்று அந்த நபர் மன்னிப்பு கேட்கும் வீடியோவை, போலீசார் வெளியிட்டுள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த கார் ஒன்றை எடுக்குமாறு, அதில் இருந்த தம்பதியிடம் போலீசார் கூறி உள்ளனர்.
இதை ஏற்க மறுத்த தம்பதி, போலீசாரை சகட்டுமேனிக்கு திட்ட ஆரம்பித்தனர். மதுபோதையில் இருந்த அவர்கள் இருவரும், துணை முதல்வர் உதயநிதி பெயரைக் கூறி, 'அவரைத் தெரியும்' என்று கூறி மிரட்டல் விடுத்தனர். மேலும் முகம் சுழிக்கும் வகையில் போலீசாரை திட்டித் தீர்த்தனர். போலீசாரை கேலி கிண்டலும் செய்தனர்.
இவர்களின் நடவடிக்கையை பணியில் இருந்த போலீசார் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். போலீசார் வீடியோ எடுப்பதை கண்ட ஜோடி, பந்தாவாக போஸ் ஒன்றும் தந்தனர். இந்த சம்பவத்தின் முழு வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சை ஆனதோடு, அவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்தது.
இதையடுத்து, அந்த தம்பதியின் கார் பதிவு எண்ணை கொண்டு, அவர்கள் யார் என போலீசார் விசாரித்தனர். முழு விசாரணையில் அவர்கள் சந்திரமோகன், தனலட்சுமி என்பது தெரியவந்தது. மேலும் சந்திரமோகன் வேளச்சேரியை சேர்ந்தவர், தனலட்சுமி மயிலாப்பூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதில் தனலட்சுமி, சந்திரமோகனின் மனைவி அல்ல, காதலி என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். கார் பதிவு எண்ணின் மூலம் கிடைத்த வேளச்சேரி முகவரிக்கு சென்று பார்த்த போது தான் இந்த விவரமே போலீசாருக்கு தெரிந்தது. வேளச்சேரியில் அவரது ஒரிஜினல் மனைவியிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரின் செல்போன் மூலமே சந்திரமோகன் வேளச்சேரியில் உள்ள லாட்ஜில் பதுங்கி இருப்பதை தெரிந்து கொண்டனர்.
உடனடியாக அங்கு சென்ற போலீசார், சந்திரமோகன், அவரது காதலி தனலட்சுமியை கைது செய்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதை உறுதி செய்து, எக்ஸ் வலைதள பக்கத்தில் போலீசார் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளனர். கைதான ஜோடி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையை தொடர்ந்து சந்திரமோகன் தமது செயலுக்கு மன்னிப்பு கோரி உள்ளார். அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோவை போலீசார் வெளியிட்டு உள்ளனர். அதில் சந்திரமோகன் என்ன நடந்தது என்பதை முழுவதும் கூறி போலீசாரை திட்டியதையும், மதுபோதையில் இவ்வாறு நடந்து கொண்டதாகவும், இனி இவ்வாறு பேசமாட்டேன் என்றும் கூறி இருக்கிறார்.