தலைநகரை தவிக்க வைக்கும் பெஞ்சல்! பறக்கும் ரயில் சேவை ரத்து!
தலைநகரை தவிக்க வைக்கும் பெஞ்சல்! பறக்கும் ரயில் சேவை ரத்து!
UPDATED : நவ 30, 2024 02:33 PM
ADDED : நவ 30, 2024 01:08 PM

சென்னை: சென்னையில் பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள பெஞ்சல் புயல் மெல்ல, மெல்ல நகர்ந்து வருகிறது. மரக்காணம், மாமல்லபுரம் இடையே இன்று இரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
பெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை இன்னமும் ஓயவில்லை. முக்கிய பகுதிகளில் அடாது பெய்து வரும் மழையின் தீவிரம் நேரம் நகர, நகர அதிகமாகி வருகிறது.
நகரில் எங்கு பார்த்தாலும் சாலைகளே தெரியாத நிலையில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி உள்ளது. போர்க்கால அடிப்படையில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இருந்தாலும் பல பகுதிகளில் மழையால் கூடுதலாக தண்ணீர் தேங்கி வருகிறது.
இந் நிலையில் சென்னையில் பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை முதல் இயங்கி வந்த ரயில்சேவை தற்காலிகமாக நண்பகல் 12.15 மணி முதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
பலத்த காற்றுடன் மழை கொட்டி வருவதால் ரயிலை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. மணிக்கு 70 கி.மீ., வேகத்துக்கு அதிகமாக காற்று வீசி வருவதால் சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை ரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.