'தேனாண்டாள் பிலிம்ஸ்' உரிமையாளர் மீது காசோலை மோசடி வழக்கு
'தேனாண்டாள் பிலிம்ஸ்' உரிமையாளர் மீது காசோலை மோசடி வழக்கு
ADDED : டிச 28, 2025 01:59 AM

சென்னை: பேட்ட, காஞ்சனா- 3 படங்களுக்கான வெளிநாட்டு உரிமை பெற்று தரும் விவகாரத்தில், 'தேனாண்டாள் பிலிம்ஸ்' நிறுவன உரிமையாளர் முரளிக்கு எதிராக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இப்படங்களின் வெளிநாட்டு உரிமையை பெற்றுத் தருவதாக, தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் முரளி, மலேஷியாவில் உள்ள 'மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதற்காக, 2018ல், மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம், 30 கோடி ரூபாயை முரளிக்கு வழங்கி இருந்தது. ஆனால் ஒப்பந்தப்படி, இரண்டு படங்களின் வெளிநாட்டு உரிமையை, முரளி பெற்று தரவில்லை. இதைத்தொடர்ந்து, 15 கோடி ரூபாயை மட்டும், மலேஷிய நிறுவனத்திற்கு முரளி திரும்ப அளித்திருந்தார்.
மீதி தொகை திரும்ப செலுத்தாததை தொடர்ந்து, சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு, முரளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின், 10 கோடி ரூபாய்க்கான காசோலையை, மலேஷியா நிறுவனத்திற்கு முரளி கொடுத்திருந்தார். இந்த காசோலை, வங்கியில் பணம் இல்லாத காரணத்தால் திரும்பியுள்ளது.
இதையடுத்து, முரளிக்கு எதிராக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம், காசோலை மோசடி வழக்கு தொடர்ந்துள்ளது.

