செட்டி நாடு கைத்தறி சேலை : தயாரிப்பு பணியில் வேகம்
செட்டி நாடு கைத்தறி சேலை : தயாரிப்பு பணியில் வேகம்
ADDED : ஆக 21, 2011 01:51 AM
காரைக்குடி : காரைக்குடி, திருப்பத்தூர், கோவிலூரில் 5,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கைத்தறி நெசவில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு தயாராகும் செட்டி நாடு கைத்தறிச் சேலைகளுக்கு, நல்ல வரவேற்பு உள்ளது. காரைக்குடிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர், இச்சேலைகளை அதிகம் வாங்கிச் செல்கின்றனர்.
நூல் தரம், எளிதில் சாயம் போகாமல் இருப்பது, இந்தச் சேலையின் சிறப்பம்சம். சுறுசுறுப்பு: தற்போது, தீபாவளியை முன்னிட்டு, நெசவாளர்கள் சேலை உற்பத்தியில், மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஒரு மாதத்திற்கு, குறைந்தது 16 முதல் 20 சேலைகள் வரை தயாரிக்கின்றனர். தவிர, நூல் விலை குறைவால் குடும்ப சகிதமாகவும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயாராகும் சேலைகள், தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, விஜயவாடா, டில்லி வரை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. செட்டி நாடு காட்டன் 'சுரிதார்' பல்வேறு 'டிசைன்களில்' தயாராகிறது. கைத்தறி நெசவாளர் சங்க மாவட்டச் செயலர் பழனியப்பன் கூறுகையில், ''கடந்தாண்டு தீபாவளியையொட்டி, தொடர் மழையால் சேலை உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது. இந்தாண்டு முன்னதாகவே, சேலை உற்பத்தியில் நெசவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சில வாரங்களாக, இந்தப் பகுதியில் சேலை உற்பத்தி சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்தினரும் மாதத்திற்கு, 20 முதல் 25 சேலை வரை உற்பத்தி செய்கின்றனர். மாதத்திற்கு காரைக்குடியில் இருந்து, 2500 சேலைகள் வரை உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்காக அனுப்பப் படுகின்றன,'' என்றார்.