துாத்துக்குடியில் டைடல் நியோ பார்க் திறந்தார் முதல்வர்
துாத்துக்குடியில் டைடல் நியோ பார்க் திறந்தார் முதல்வர்
UPDATED : டிச 30, 2024 06:17 AM
ADDED : டிச 30, 2024 12:32 AM

துாத்துக்குடி: சென்னையில் கடந்த, 2000ல் மிகப்பெரிய டைடல் பார்க் திறக்கப்பட்டது. தொடர்ந்து, கோவை மற்றும் பட்டாபிராம் ஆகிய பகுதிகளில் டைடல் பார்க் திறக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுதும் பரவலாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், டைடல் நியோ பார்க் என்ற மினி டைடல் பார்க் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, விழுப்புரம், திருப்பூர், வேலுார், தஞ்சாவூர், துாத்துக்குடி, சேலம், காரைக்குடி ஆகிய இடங்களில் மினி டைடல் பார்க், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் டைடல் பார்க் உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்ட மினி டைடல் பார்க் திறக்கப்பட்டது.
தென் தமிழகத்தில் முதன் டைடல் நியோ பார்க் துாத்துக்குடியில் நேற்று திறக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். டைடல் நியோ பார்க்கில் அமைய உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன், அவர்களுக்கான இட ஒதுக்கீட்டு ஒப்பந்தங்களை முதல்வர் ஸ்டாலின் பரிமாறிக் கொண்டார்.
துாத்துக்குடியில், 63,000 சதுரடி பரப்பில் தரைத்தளம் மற்றும் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பார்க், வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சி கூடம், கலையரங்கம், தடையற்ற மின் வசதி ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.
இந்த மினி டைடல் பார்க், 32.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 1,000க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெறுவர் என, தொழில்துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார். தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு, துாத்துக்குடியில் மேலும் ஒரு டைடல் பார்க் விரைவில் துவங்கப்படும் என, அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன், தலைமை செயலர் முருகானந்தம், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை செயலர் அருண் ராய், டைடல் பார்க் மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்துாரி, கலெக்டர் இளம்பகவத் உட்பட பலர் பங்கேற்றனர்.