சத்தியப் பிரமாணத்துக்கு எதிராக முதல்வர் செயல்படுகிறார்: அண்ணாமலை
சத்தியப் பிரமாணத்துக்கு எதிராக முதல்வர் செயல்படுகிறார்: அண்ணாமலை
ADDED : அக் 31, 2025 04:33 PM

கோவை: '' பதவியேற்ற போது எடுத்துக் கொண்ட சத்தியப் பிரமாணத்துக்கு எதிராக முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கை உள்ளது,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: நகராட்சி நிர்வாகம் மற்றம் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த ஊழல் குறித்து  போலீஸ் டிஜிபிக்கு,  அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. அதற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளனர். ரூ.888 கோடி ஊழல் நடந்துள்ளது. வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளது.
அதிகாரமில்லை
ஆனால் திராவிட மாடல் அரசு மீது பழி சுமத்துகின்றனர் என அமைச்சர் நேரு குற்றம்சுமத்துகிறார். இந்த விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என டிஜிபிக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் எப்ஐஆர் செய்யப்பட்ட பிறகு தான் அமலாக்கத்துறை களத்துக்கு வர முடியும். எப்ஐஆர் இல்லாமல் அமலாக்கத்துறை விசாரணையை துவக்க முடியாது. எப்ஐஆர் போட அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை. அதன் பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆனால், பிரதமர் மோடி  பீஹாரில் இருந்து தமிழக மக்களை அவமானப்படுத்திவிட்டார் , தமிழகத்தை பற்றி தப்பாக பேசிவிட்டார் என முதல்வர் கூறுகிறார். ஆனால், பிரதமர் மோடி, ' தமிழகத்தில் வசிக்கும்வேலை பார்க்கும்  பீஹாரை சேர்ந்தவர்களை திமுக கட்சி தலைவர்கள் அவமானப்படுத்துகின்றனர்,' என்று தான் கூறினார்.டிஆர்பி ராஜா,  பொன்முடி. ஆ.ராசா உள்ளிட்ட திமுகவினர் எப்படி அவமானப்படுத்தினர் என்ற ஆதாரத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளோம்.
நகராட்சி நிர்வாக துறையில் நடந்த ஊழல் குறித்து ஆதாரம் கொடுத்தும்,  அதை திசைதிருப்புவதற்காக மோடி கூறாததை சொன்னதாக திசைதிருப்புகிறார்.  சத்தியபிரமாணத்துக்கு எதிரக முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கை உள்ளது.
அடுத்த ஊழல்
சத்திய பிரமாணத்தை பொறுத்தவரை, அரசியலமைப்பை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். மக்கள் நலனை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். ஆனால் பிரதமர் சொல்லாத விஷயத்தை சொன்னதாக முதல்வர் கூறினால், சத்திய பிரமாணத்துக்கு எதிராக தானே .முதல்வர் உடனடியாக தன்னைத்தானே திருத்திக் கொள்ள வேண்டும். எதற்கு பொய் பேச வேண்டும். 888 கோடி ரூபாய் ஊழல் வழக்கை எதிர்கொள்ள வேண்டும். அமைச்சர் சக்கரபாணி துறையில் நடந்த  அடுத்த ஊழல் வெளிவந்துள்ளது.
இபிஎஸ் முதல் நயினார் நாகேந்திரன் வரை நெல் கொள்முதல் குறித்து பேசுகின்றனர். நெல் கொள்முதல் சரியாக செய்யவில்லை. கொள்முதல் செய்யப்பட்ட நெல் கொண்டு வருவதற்கு 48 நாட்கள் ஆகி உள்ளது. ஆனால் ஆவணத்தின்படி 48 மணி நேரத்தில் கொண்டு வரப்பட வேண்டும்.அதிலும் 160 கோடி ரூபாய் ஊழல் .இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதை பற்றி வாய் திறக்காத முதல்வர், பிரதமர் மோடி கூறாத விஷயத்தை பற்றி கூறுகிறார்.
திமுக கங்கணம்
வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு தீவிரப்பணி  குறித்து திமுக எதிர்க்கிறது. தமிழகத்தில் 2002 ல் 191 தொகுதிக்கும், 2005ல் 31 தொகுதிகளுக்கும் நடந்துள்ளது.  பீஹாரில் நடத்திய பிறகு ஒருவர் கூட மேல்முறையீடு செய்யவில்லை. 100 சதவீதம்  நேர்மையாக நடந்துள்ளது. தேர்தல் நடக்கும் மாநிலங்களில் விண்ணப்பம் கொடுத்து  துவங்குகின்றனர்.இதனை மாநில அரசு  ஆதரிக்க வேண்டும். அதிகாரிகளை மாநில அரசு அளிக்க வேண்டும். இது மாநில அரசின் கடமை. ஆனால் திமுக அரசு திட்டமிட்டு  இப்பணியை தோல்வி அடைய வைக்க  கங்கணம் கட்டி கொண்டு உள்ளனர். தேர்தல் கமிஷன், மாநில தேர்தல் அதிகாரி மற்றும்  வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத் தீவிரப்பணியில் ஈடுபடும் அதிகாரிகளை தங்களது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.திசை திருப்புவதில் முதல்வர் கவனம் செலுத்தி வருகிறார்.இப்பணியை  நடத்த விட மாட்டோம் என ஒரு அமைச்சர் கூறினால், அது அரசியலமைப்புக்கு எதிரானது. அவர்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அரசியல்சாசனம் கூறுகிறது.   நடத்த விட மாட்டோம் எனக்கூறும் அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு வீட்டுக்கு போங்கள். ஆட்சியை கலைத்துவிடுங்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

