ADDED : ஜூலை 25, 2025 10:21 PM

செங்கல்பட்டு: '' முதல்வர் ஸ்டாலின் தினம் நாடகம் போட்டு நடித்துக் கொண்டு உள்ளார்,'' என பாமக தலைவர் அன்புமணி பேசினார்.
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை செங்கல்பட்டு மாவட்டத்தில் துவக்கிய பிறகு அன்புமணி பேசியதாவது: இன்று ராமதாஸ் பிறந்த நாள் என்பதால், நடைபயணத்தை இன்று துவக்குகிறோம். அவர் 100 வயது வரை மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என தொடர்ந்து வாழ்த்துவோம்.
ஒரு முக்கிய கட்டத்தில் இருக்கிறோம். தமிழகத்தில் ஆட்சி செய்யும் மக்கள் விரோத ஆட்சி ஸ்டாலின் தலைமையில் கொடூர ஆட்சி நடக்கிறது. இதனை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். சுதந்திரம் பெற்ற 78 ஆண்டுகளுக்கு பிறகு மக்களுக்கு இன்னும் உரிமை கிடைக்கவில்லை. அரசியல் சாசனத்தில் கொடுக்கப்பட்டுள்ள 10 உரிமைகளை அரசு நமக்கு கொடுக்க வேண்டும். ஆனால், இந்த உரிமைகள் என்றால் என்ன என தெரியாத ஒரு அரசை ஸ்டாலின் நடத்துகிறார். நடித்து கொண்டுள்ளனர்.
மக்கள் இன்று கோபத்தில் உள்ளனர். விவசாயிகள் கொந்தளிப்பாக இருக்கிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.பெண்கள் பகலில் கூட பாதுகாப்பாக வெளியில் செல்ல முடியவில்லை. இதற்கு எல்லாம் முதல்வர் தான் காரணம். அவருக்கு கீழ் தான் போலீஸ் துறை உள்ளது. பாலியல் வன்கொடுமைகளை கொடூரமான முறையில் தமிழகத்தில் செய்கின்றனர். ஆனால், முதல்வர் நாடகம் போட்டு நடித்துக் கொண்டுள்ளார். 2 மணி நேரம் காஷ்ஷீட் கொடுத்து நடிக்கிறார்.
தமிழகத்தில் ஒரு விவசாயி கூட மகிழ்ச்சியாக இல்லை.விவசாயம் என்றால் நஷ்டம் ஆக உள்ளது.இந்தாண்டு விவசாயத்துறை வளர்ச்சி மைனஸ் 0.12 சதவீதம். வளர்ச்சி இல்லை. இதை விட வெட்கக்கேடு ஏதும் இருக்குமா? இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. விவசாய விரோத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. ஒரு விவசாயி கூட திமுகவுக்கு ஓட்டுப்போடக்கூடாது. ஸ்டாலினுக்கும் விவசாயத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால், நானும் டெல்டாக்காரன் என ஆவேசமாக ஸ்டாலின் பேசுவார்.
விளைநிலங்களில் மட்டுமே சிப்காட், விமான நிலையம், நிலக்கரி சுரங்கம் அமைப்போம் என கங்கணம் கட்டிக்கொண்டு திமுக அரசு செயல்படுகிறது. இதனை விவசாயிகள் மறக்கக்கூடாது.பெண்களுக்கு எதிரான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது.பெண்களுக்கு வழங்கப்படும் மாதம் ஆயிரம் உரிமைத்தொகை, டாஸ்மாக் கடைகளுக்கு தான் செல்கிறது.
கருணாநிதியாக இருந்தாலும் இதற்கு முன்பு இருந்த முதல்வர் யாரும், உரிமையே இல்லை என சொன்னது கிடையாது.ஆனால், நிறைய உரிமை இருந்தும், உரிமையில்லை என முதல்வர் பொய் சொல்கிறார். ஸ்டாலின் ஆட்சி தமிழகத்துக்கு வர அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான் காரணம். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
ஸ்டாலின் அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோபத்தில் மக்கள் உள்ளனர். தமிழகத்தில் என்ன கல்வி நடக்கிறது என வெளி மாநிலத்தவர்கள் சிரிக்கின்றனர். மோசமான நிலையில் பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வி உள்ளது. பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றிய திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இதனை அனைத்து மக்களும் சொல்கின்றனர்.
தமிழகத்தில் போலீசுக்கு சுதந்திரம் இல்லை. கட்டுப்பாடு இல்லை. சுதந்திரம் கொடுத்தால், ஒரு கஞ்சா பொட்டலம் விற்க முடியாத சூழ்நிலை உருவாகும். ஆனால், திமுககாரன் கமிஷனுக்காக விடுவதில்லை.
இவ்வாறு அன்புமணி பேசினார்.