அம்மா உணவகங்களில் இலவச உணவு, மருத்துவ முகாம்கள் நடத்த முதல்வர் உத்தரவு
அம்மா உணவகங்களில் இலவச உணவு, மருத்துவ முகாம்கள் நடத்த முதல்வர் உத்தரவு
UPDATED : நவ 30, 2024 02:01 PM
ADDED : நவ 30, 2024 01:58 PM

சென்னை: 'சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று (நவ.,30) முழுவதும் இலவசமாக உணவு வழங்க வேண்டும். மழைக்காலங்களில் தொற்று நோய் பரவாமல் தடுக்க மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அவரது அறிக்கை:
பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். துணையாக அரசு இருக்கிறது. மாமன்ற உறுப்பினர்களை களத்தில் இருந்து, பணியாற்ற உத்தரவிட்டுள்ளேன். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். புயலை எதிர்கொள்ள அரசும், மாநகராட்சி பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். மின்சாரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், உடனடியாக சீரமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
மழைக்காலங்களில் தொற்று நோய்கள் ஏற்படுவதை தடுக்க மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் இருப்பு வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்க வேண்டும். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள நிவாரண முகாம்கள் அனைத்தும் வசதிகளுடன் தயாராக இருக்க வேண்டும். தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 5 நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் இன்றும் முழுவதும் மக்களுக்கு உணவு இலவசமாக வழங்கப்படும். பொதுமக்கள் மிக அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்க வேண்டும். கடற்கரைக்கு புயலை வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது. அரசு மேற்கொண்டு வரும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.