சேதத்தை விரைந்து கணக்கிட்டு நிவாரணம் முதல்வர் உத்தரவு
சேதத்தை விரைந்து கணக்கிட்டு நிவாரணம் முதல்வர் உத்தரவு
ADDED : டிச 14, 2024 09:24 PM
சென்னை:தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதம் உட்பட அனைத்து சேத விபரங்களையும் துரிதமாக கணக்கிட்டு, நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கன மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரண பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது.
அதில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, நீர்வளத் துறை செயலர் மணிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முதல்வர் கூறியுள்ளதாவது:
தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், அணைகளின் நீர் இருப்பை கண்காணிக்க வேண்டும். அணைகளில் இருந்து நீர் திறந்து விடும்போது, பொது மக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டும்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். பயிர் சேத விபரங்கள் உட்பட அனைத்து சேத விபரங்களையும் துரிதமாக கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முதல்வரின் உத்தரவுப்படி, அமைச்சர்கள் நேரு, சாத்துார் ராமச்சந்திரன் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடியில் முகாமிட்டு, நிவாரண பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.