அர்ச்சகர்களின் வாரிசுகள் மேற்படிப்புக்கு தலா ரூ.10,000 வழங்கினார் முதல்வர்
அர்ச்சகர்களின் வாரிசுகள் மேற்படிப்புக்கு தலா ரூ.10,000 வழங்கினார் முதல்வர்
ADDED : ஆக 13, 2025 07:46 AM

சென்னை: அர்ச்சகர்களின் வாரிசுகள் 600 பேருக்கு, தலா 10,000 ரூபாய் உதவித்தொகையை, முதல்வர் வழங்கினார்.
* ஒருகால பூஜை திட்டம் செயல்படுத்தப்படும் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களின் வாரிசுகளுக்கு, மேற்படிப்பு கல்வி உதவித் தொகையாக, 600 பேருக்கு தலா, 10,000 ரூபாய் வீதம், 60 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
நேற்று, 10 பேருக்கு தலா 10,000 ரூபாய்க்கான வங்கி வரைவோலைகளை, தலைமை செயலகத்தில் நேற்று, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
* அரசு பணியாளர் தேர்வாணையத்தால், ஹிந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட, 21 பேருக்கு பணி நியமன ஆணைகளையும், முதல்வர் வழங்கினார். அமைச்சர் சேகர்பாபு, தலைமை செயலர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கீழ்க்கண்ட திட்டங்கள் மற்றும் பணிகளையும் முதல்வர் நேற்று துவக்கி வைத்தார்:
* கன்னியாகுமரி கோடிமுனை கிராமத்தில், 35 கோடி ரூபாய், பள்ளம்துறை கிராமத்தில், 26 கோடி ரூபாய், துாத்துக்குடி அமலிநகர் கிராமத்தில், 58 கோடி ரூபாய் மதிப்பீட்டில், துாண்டில் வளைவுடன் மீன் இறங்குதளங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.
* திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில், 26.8 கோடி ரூபாய் செலவில், நிலைப்படுத்தப்பட்ட முகத்துவாரம் அமைக்கப்பட்டு உள்ளது.
* சாத்தான்குப்பம் கிராமத்தில், 8 கோடி ரூபாய், அரங்கன்குப்பம், கூனான்குப்பம் கிராமங்களில், 6.81 கோடி ரூபாய் செலவில், புதிய மீன் இறங்குதளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
* கடலுார் மாவட்டம் சொத்திகுப்பம், ராசாப்பேட்டை கிராமங்களில், 8.50 கோடி ரூபாய் செலவில், புதிய மீன் இறங்குதளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
* கள்ளக்குறிச்சி வடக்கனந்தல், கோமுகி அணையில், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய அரசு மீன் விதை பண்ணை அமைக்கப்பட்டு உள்ளது.
* சேலம், மேட்டூர் அரசு மீன் விதை பண்ணையில், 3 கோடி ரூபாய் செலவில் பயிற்சி மையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு, 177 கோடி ரூபாய் செலவிலான, 9 முடிவுற்ற திட்ட பணிகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
* கால்நடை பராமரிப்பு துறைக்கு, 22 கால்நடை உதவி மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில் பணிபுரிந்து உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள், 17 பேருக்கு கருணை பணி வழங்கப்பட உள்ளது. இவர் களுக்கான பணி நியமன ஆணைகளையும், முதல்வர் வழங்கினார்.
அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், கால்நடை பராமரிப்பு துறை செயலர் சுப்பையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.