அதிக குற்றங்கள் நடப்பது போல் திட்டமிட்டு பரப்புகின்றனர்; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
அதிக குற்றங்கள் நடப்பது போல் திட்டமிட்டு பரப்புகின்றனர்; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
ADDED : மார் 20, 2025 12:01 PM

சென்னை: சில கொலை குற்றங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகும் போது அதிக குற்றங்கள் நடப்பது போல் திட்டமிட்டு பரப்பப்படுகிறது என இ.பி.எஸ்.., குற்றச்சாட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4 கொலை சம்பவங்கள் நடந்துள்ளது என சட்டசபையில் அ.தி.மு.க., கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டு வந்தது. சட்டசபையில், 'கொலை அன்றாட நிகழ்வாக நடந்து வருகிறது' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நேற்று 4 கொலைகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவருக்கு பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.
கோவை சம்பவம் தற்கொலை எனவும், சிவகங்கை சம்பவம் குடும்ப தகராறு எனவும் தெரியவந்துள்ளது. மதுரை, ஈரோடு சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து எதிர்க்கட்சி தலைவர் போகிற போக்கில் சொல்லி கொண்டு போய் இருக்கிறார். தைரியம் இருந்தால் என் பதிலை கேட்டுவிட்டு அ.தி.மு.க.,வினர் செல்ல வேண்டும். இது குறித்து புள்ளி விவரங்களை தெரிவிக்க விரும்புகிறேன்.
போலீசார் சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எந்த வித பாரபட்சமும் காட்டப்படுவதில்லை. குற்றச்சம்பவங்கள் நடந்த பிறகு மேற்கொள்ளப்படும் துரித நடவடிக்கைகள் ஒரு புறம், குற்றச்சம்பவங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மறுபுறம் என போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் கூலிப்படையினர் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2023ல் கொலை முயற்சிகள் 49,220ஆக இருந்த நிலையில் 2024ல் 31 ஆயிரமாக குறைந்துள்ளது. ஒரே ஆண்டில் 17 ஆயிரத்தில் 782 குற்றங்கள் குறைத்து இருக்கிறோம். சில கொலை குற்றங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகும் போது அதிக குற்றங்கள் நடப்பது போல் திட்டமிட்டு பரப்படுகிறது. உண்மையில் 2024ல் கொலை குற்றங்கள் 6.8 சதவீதமாக குறைந்துள்ளது.
பழிக்கு பழி வாங்கும் கொலை சம்பவங்களும் குறைந்துள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அதிமுக ஆட்சியில் அதிக கொலைகள் நடந்துள்ளன. கோவிட் காலத்திலும் அதிக கொலைகள் நடந்துள்ளன.அரசின் மீது குற்றம் சுமத்துபவர்கள் கடந்த ஆட்சி காலத்தில் நிகழ்ந்த கொலைகள் குறித்து எண்ணி பார்க்க வேண்டும். தி.மு.க.,ஆட்சியில் போலீசார் மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கை காரணமாக, கடந்த 12 ஆண்டில் 2024ம் ஆண்டில் மிகவும் குறைவாக 1,545 கொலைகள் நடந்துள்ளன. இது தான் உண்மை.
குற்றங்களை தடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, பொது அமைதியை நிலைநாட்டி தமிழக போலீசார் எனது தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
அரசின் மீது பழி சுமத்தி அரசியல் ஆதாயம் பெற விரும்புபவர்கள் கடந்த ஆட்சிகாலத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பதை எண்ணி பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.