ADDED : டிச 13, 2024 01:40 PM

சென்னை: 'உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் குகேஷ்க்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும்' என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
செஸ் உலகின் இளம் சாம்பியன் ஆகி புதிய சாதனை படைத்தார் இந்தியாவின் குகேஷ். இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், சர்வதேச போட்டிகளில் விளையாடி, உலக சாம்பியன் என்ற பட்டத்தை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக, உலக சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை குகேஷ் தற்போது பெற்றுள்ளார்.சரித்திரம் படைத்துள்ள செஸ் வீரருக்கு, நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து லோக்சபாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், குகேஷ்க்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த குகேஷ் நேற்று நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வென்று சாதனை படைத்தார். மிக இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று உலக செஸ் சாம்பியனாக வாகைசூடி சாதனை படைத்து, இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த குகேஷ்க்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.