அமலாக்கத்துறையை கண்டு முதல்வர் ஸ்டாலினுக்கு பயம்: இ.பி.எஸ்.,
அமலாக்கத்துறையை கண்டு முதல்வர் ஸ்டாலினுக்கு பயம்: இ.பி.எஸ்.,
UPDATED : ஜூலை 11, 2025 10:36 PM
ADDED : ஜூலை 11, 2025 07:53 PM

விழுப்புரம்: '' அமலாக்கத்துறை எப்போது கதவை தட்டும் என முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர்களும் நடுங்கி கொண்டு உள்ளனர்,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
முற்றுப்புள்ளி
விழுப்புரம் மாவட்டம் ,வானூர், மயிலம் , செஞ்சி ஆகிய பகுதிகளில் இ.பி.எஸ்., பேசியதாவது: சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுப்பதாக ஸ்டாலின் ஏமாற்றினர். மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யப்படாததால், மாணவர்கள் உயிர்நீத்தது தான் மிச்சம். பொய் பேசி ஓட்டு பெற்று ஏமாற்றும் கட்சி தி.மு.க., கட்சியிலும், ஆட்சியிலும் தி.மு.க., குடும்பத்தில் இருப்பவர் தான் பொறுப்புக்கு வர முடியும். தி.மு.க.,வில் நடப்பது மன்னர் ஆட்சியா? குடும்பத்தில் இருப்பவர் தான் வர வேண்டுமா? வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக சட்டசபை தேர்தல் இருக்கும்.
மாணவர்கள் ஏற்றம்
'' படிப்பு என்றால் பழனிசாமிக்கு கசக்கிறது,'' என ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். கல்வி என்றால் எனது உயிர்மூச்சு என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். மனிதனுக்கு கண் எப்படி முக்கியமோ , குழந்தைகளுக்கு கல்வி முக்கியம் என்பதை உணர்ந்துள்ளோம். கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகளை திறந்தது அ.தி.மு.க., அரசு.
கருணாநிதி பெயர் வைப்பதற்காக ஸ்டாலின் பல்கலை திறக்கிறார். மக்கள், குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி கிடைக்க பல்கலை அமைத்தோம். அ.தி.மு.க., ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து,நிதி ஒதுக்கி புரட்சி ஏற்படுத்தினோம். 4 ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில் கல்வி வளர்ச்சிக்கு என்ன செய்தீர்கள்? மாணவர்களின் ஏற்றத்துக்காக பல்கலை கொண்டு வந்தோம்.
ஒரே முதல்வர்
7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மூலம் அரசு பள்ளிகளில் படித்த 2,818 மாணவர்கள் டாக்டர்களாக ஆகி உள்ளனர். இது சாதனை. இந்த மசோதாவை கொண்டு வந்த போது கவர்னர் அனுமதி வழங்கவில்லை. அரசியலமைப்பு சட்டம் 162 வது பிரிவை பயன்படுத்தி உத்தரவு போட்ட ஒரே முதல்வர் நான் தான்.
'தில்', தெம்பு, திராணி இருந்தால், கருணாநிதி பெயரில் பல்கலை அமைப்பேன் என சொல்லிக்கொண்டு இருக்கும் ஸ்டாலின், நான் செய்தது போன்று அரசியலமைப்பு சட்டப்பிரிவை பயன்படுத்த வேண்டும். அந்த 'தில்' இல்லை.
மக்களுக்காக
நாங்கள் பா.ஜ., உடன் கூட்டணி இருந்தும் இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி மறுத்தும், சாதனை படைத்தோம். எங்களை பார்த்தா கல்வி கசக்கிறது என சொல்கிறீர்கள். இந்த விஷயம் மக்களுக்கு தெரியாமல் இருந்தது. இதனை தெரிய வைத்தற்கு நன்றி. இந்தியாவிலேயே, எந்த முதல்வரும், அரசியலமைப்பு சட்டம் 162 வது பிரிவை பயன்படுத்தியது கிடையாது. பயன்படுத்தியது நான் தான். பதவியை பற்றி கவலைப்படவில்லை. மக்களை பற்றியும், மாணவர்களை பற்றி மட்டுமே கவலைப்பட்டேன்.
எங்களைப் பற்றி பேசுவதற்கு ஸ்டாலனிக்கு எந்த அருகதையும் இல்லை. என்னை, பா.ஜ., அடிமை என ஸ்டாலின் சொல்கிறார். நீங்கள் தான் நடுங்கி கொண்டுள்ளீர்கள். அமலாக்கத்துறை எப்போது கதவை தட்டும் என நீங்களும் அமைச்சர்களும் பயந்து கொண்டு உள்ளீர்கள். பயத்தை வைத்து கொண்டு எங்களிடம் பேசலாமா? அ.தி.மு.க., எதற்கும் அஞ்சாத கட்சி. தொண்டர்கள் நிறைந்த கட்சி.
புரிந்து கொள்ளுங்கள்
அ.தி.மு.க.,வை உடைக்க எத்தனையோ திட்டம் போட்டீர்கள். அத்தனையையும் உடைத்து எறிந்தோம். தகர்த்தெறிந்தோம். எங்களை காப்பாற்றினோம் என ஸ்டாலின் சொல்கிறார். தி.மு.க.,வை தான் காப்பாற்ற வேண்டும். எத்தனை பேர் எங்கு இருப்பார்கள் என தெரியவில்லை. தேர்தல் நேரத்தில் பத்திரமாக இருப்பார்கள். அமைச்சர்கள் எங்கு இரு்பபார்கள் என மக்களுக்கு தெரியம்.அராஜகம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள். யார் கொடுப்பார்கள் என நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
பொய் பேசுவதில் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு அளிக்கலாம். முதல்வர், கட்சி தலைவர், எதை பேசுவது என தெரியாமல் பேசுவது ஸ்டாலின் தான். இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.