நம் பட்ஜெட்டும், தமிழும் 'ஹிட்' முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
நம் பட்ஜெட்டும், தமிழும் 'ஹிட்' முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
ADDED : மார் 17, 2025 03:25 AM
சென்னை,: “நம் பட்ஜெட்டும் ஹிட்; தமிழும் ஹிட்,” என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின், 2025 - 26ம் ஆண்டு பட்ஜெட் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ பதிவு:
பட்ஜெட் லோகோவை வெளியிட்ட போது, மொழி கொள்கையில் எந்த அளவு உறுதியாக இருக்கிறோம் என்பதை காட்ட, 'ரூ' என, வைத்திருந்தோம். தமிழை பிடிக்காதவர்கள், அதை பெரிய செய்தியாக்கி விட்டனர்.
மத்திய அரசிடம், 100 நாள் வேலை திட்டத்திற்கான சம்பளம் தாருங்கள்; பேரிடர் நிதி கொடுங்கள், பள்ளிக்கல்வி நிதியை விடுவியுங்கள் என, தமிழகம் சார்பில், 100 கோரிக்கை வைத்திருப்பேன்.
அதற்கெல்லாம் பதில் பேசாத மத்திய நிதி அமைச்சர், இதைப்பற்றி பேசி உள்ளார். அவர் பல பதிவுகளில் 'ரூ' என்று தான் போட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் எல்லாரும், 'ருபீசை', ஆர்.எஸ்., என்றுதான் எழுதுவர். அதெல்லாம் பிரச்னையாக தெரியாதவர்களுக்கு, இதுதான் பிரச்னையாக தெரிகிறது போல... மொத்தத்தில் இந்திய அளவில் நம் பட்ஜெட்டும் ஹிட், தமிழும் ஹிட்!
அமைச்சர்கள், அதிகாரிகளிடம் பேசி, இந்த பட்ஜெட்டை தயார் செய்தோம். பட்ஜெட்டில் உள்ள திட்டங்கள் எல்லாமே எனக்கு நெருக்கமானவை தான்.
எதிர்க்கட்சிகள் விமர்சனம் ஆக்கப்பூர்வமானதாக இருந்தால், அதை நாம் பரிசீலிக்கலாம். ஏதாவது எதிர்மறையாக சொல்வதற்காகவே, சிலர் சொல்வதில் அரசு மேல் இருக்கும் வன்மம் மட்டும்தான் தெரிகிறது.
நம் கடன் வளர்ச்சி என்பது, கடந்த 2011ல் இருந்து 2016 வரைக்கும், 108 சதவீதம். கடந்த 2016 - 2021ல், 128 சதவீதமாக அதிகரித்தது.
ஆனால், தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து, இப்போது வரை, 93 சதவீதமாக குறைத்திருக்கிறோம்.
தமிழகம் அனைத்திலும், 'நம்பர் 1' ஆக இருக்க வேண்டும் என்ற இலக்கை அடைய வேண்டும். அதனால், ஓய்வே கிடையாது.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.