ரூ.190 கோடி கோவில் பணி; முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
ரூ.190 கோடி கோவில் பணி; முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
ADDED : நவ 13, 2024 11:41 PM

சென்னை: ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில்களில், 190 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள பணிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று, அடிக்கல் நாட்டினார்.
மதுரை கள்ளழகர், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் பிள்ளையார் மாரியம்மன், திருச்சி சமயபுரம், நாகப்பட்டினம் மாவட்டம் துளியாபட்டினம் அவ்வையார் மற்றும் விஸ்வநாத சுவாமி, கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி, கருத்தம்பட்டி சென்னியாண்டவர், திருப்பூர் பெருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகியவற்றில், 29 பணிகள், 190 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட உள்ளன.
இப்பணிகளுக்கு, நேற்று முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக அடிக்கல் நாட்டினார்.
மேலும், கோவை, நாகப்பட்டினம், திருச்சி, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, கடலுார், காஞ்சிபுரம், சிவகங்கை, கரூர் மாவட்டங்களில், 27 கோவில்களில், 42.7 கோடி ரூபாய் மதிப்பில் முடிக்கப்பட்ட பணிகளையும், முதல்வர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலர் முருகானந்தம், ஹிந்து சமய அறநிலையத்துறை செயலர் சந்தரமோகன், கமிஷனர் ஸ்ரீதர் கலந்து கொண்டனர்.