உயர் ரக மரங்கள் வளர்ப்பு, விற்பனைக்கு வேளாண் காடுகள் கொள்கை வெளியீடு முதல்வர் ஸ்டாலின்
உயர் ரக மரங்கள் வளர்ப்பு, விற்பனைக்கு வேளாண் காடுகள் கொள்கை வெளியீடு முதல்வர் ஸ்டாலின்
ADDED : மார் 05, 2026 03:45 AM

சென்னை: உயர் மதிப்பு கொண்ட மரங்களை, வேளாண் நிலங்களில் வளர்ப்பது, அவற்றை வெட்டி எடுத்து விற்பனை செய்வதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் வகையில், வேளாண் காடுகள் வளர்ப்பு கொள்கை வெளியிடப்பட்டு உள்ளது.
வனங்கள் மற்றும் மரங்களால் சூழப்பட்ட பரப்பை, 33 சதவீதமாக அதிகரிக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வனங்களுக்கு வெளியேயுள்ள மரங்களின் பரப்பளவை அதிகரித்து, இந்த இலக்கை அடைய, வேளாண் காடுகள் வளர்ப்பு முறைகள் பெருமளவு ஊக்குவிக்கப்படுகின்றன.
விளைநிலங்களின் உற்பத்தி திறனை அதிகரித்து, விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி, உயர் மதிப்பு கொண்ட தேக்கு, சந்தனம், செம்மரம், ஈட்டி போன்ற மரங்களை, விவசாயிகள் தங்கள் வயல்களிலேயே பயிரிட்டு பயன் பெறலாம்.
இதற்காக, வன சட்டங்களில் உள்ள விதிகளை எளிதாக்கவும், வேளாண் காடு வளர்ப்பில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றும் வகையிலும், 'தமிழ்நாடு வேளாண் காடுகள் வளர்ப்பு கொள்கை 2026' உருவாக்கப்பட்டு உள்ளது.
உயர் மதிப்பு கொண்ட மரங்களை வேளாண் நிலங்களில் வளர்ப்பது, அவற்றை வெட்டி எடுத்து சென்று விற்பனை செய்வதற்கான நடைமுறைகளை எளிதாக்குதல், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில், 'கார்பன்' சேமிப்பை அதிகரித்தல், தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட பல அம்சங்கள், இக்கொள்கையில் இடம் பெற்றுள்ளன.
இந்த கொள்கையை, தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், சுப்பிரமணியன், தலைமை செயலர் முருகானந்தம், வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

