ADDED : மே 24, 2025 02:47 AM

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நடைபெறவுள்ள, 'நிடி ஆயோக்' கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டில்லி வந்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
மாநிலங்களுக்குரிய நிதிப் பங்கீட்டை நிர்ணயம் செய்யும் நிடி ஆயோக் அமைப்பின் ஆலோசனை கூட்டம் டில்லியில் இன்று நடக்கவுள்ளது. மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்துக்கு, பிரதமர் மோடி தலைமையேற்கவுள்ளார்.
இதில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று மதியம் டில்லிக்கு வந்தார். தி.மு.க., மற்றும் காங்கிரஸ் எம்.பி., க்கள் வரவேற்றனர்.
புதிதாக கட்டப்பட்ட தமிழ்நாடு இல்லம் வந்தடைந்த முதல்வர், சிறிய ஓய்வுக்குப் பின், அக்பர் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவின் இல்லத்துக்கு சென்றார்.
சோனியாவும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும், முதல்வரை வரவேற்றனர். இருதரப்பும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டபின், சோனியாவும், முதல்வரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
இருவரும் தமிழக மற்றும் தேசிய அரசியல் குறித்து பேசியதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முதல்வர் சென்றார். அங்கு, ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் டாக்டர் பரமேஷ்வரனிடம் நலம் விசாரித்தார். இன்று காலையில் இருந்து மாலை வரை, நடக்கும் நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், மதிய உணவு இடைவேளையின்போது பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.
ஒருவேளை நேரம் கிடைத்தால், தமிழகத்துக்கு தேவையான நிதியை உடனே ஒதுக்கித் தருமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துப் பேசுவார் என, அவரோடு டில்லி வந்திருக்கும் தமிழக அதிகாரிகள் கூறினர்.
டில்லி நிகழ்ச்சிகள் முடிந்து, இன்று இரவே தமிழகம் திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்.
- நமது டில்லி நிருபர்-