முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு அரசு ஊழியரை கடனாளியாக்கும்: ஊழியர் சங்கங்கள் குற்றச்சாட்டு
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு அரசு ஊழியரை கடனாளியாக்கும்: ஊழியர் சங்கங்கள் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 29, 2025 03:34 AM

சென்னை: 'சட்டசபை மானிய கோரிக்கையில், விதி எண் 110ன் கீழ், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை கடனாளியாக்கும்,'' என, அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்டி உள்ளன.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலர் சங்கர்: முதல்வர் அறிவித்த அனைத்து சலுகைகளும், அரசுக்கு திரும்ப பெறக்கூடிய தொகையாக அறிவித்துள்ளார்.
இது, மக்கள் மத்தியில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சலுகை செய்வது போல காட்டி, ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த அறிவிப்பை புறந்தள்ளிட வேண்டும்.
அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் பாஸ்கரன், பொதுச்செயலர் சீனிவாசன்: 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்துள்ளதை அரசு ஊழியர் சங்கம் வரவேற்கிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிநிறைவுக்குப் பின் நிம்மதியாக வாழ, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் முருகையன், பொதுச்செயலர் சங்கரலிங்கம்: கடந்த காலத்தில் நிறுத்தியிருந்த அகவிலைப்படியை மத்திய அரசு அறிவித்த தேதியில் இருந்து மீண்டும் அரசு ஊழியர்களுக்கு அறிவித்தது, இந்த அரசின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சரண் விடுப்பு இந்தாண்டிலேயே வழங்கப்படும் என்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலர் அன்பழகன்: ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது தொடர்பான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தேர்தல் கால வாக்குறுதிகளை அறிவித்தால் மட்டுமே ஆசிரியர்கள், அரசு ஊழியர் நம்பிக்கையை அரசு பெற முடியும்.
தமிழ்நாடு பழைய ஓய்வூதியத் திட்ட மீட்பு இயக்கத்தின், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ்: முதல்வரின் அறிவிப்புகளில் எட்டு அறிவிப்புகள் உடனடியாக பலன் அளிக்கக் கூடியவை.
தமிழகத்தை விட பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜார்க்கண்ட், ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம் உட்பட ஏழு மாநிலங்கள் நடைமுறைப்படுத்தியதை தொடர்ந்து, தமிழகத்திலும் விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலர் ஜெயராஜ ராஜேஸ்வரன் அறிக்கை: மகப்பேறு விடுப்பில், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பெண்களுக்கு எதுவும் அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது.
சரண் விடுப்பு அறிவிப்பு நாடகம் ஏற்கனவே எதிர்பார்த்தது தான். மொத்தத்தில், 110 -விதியில் முதல்வரின் அறிவிப்பு, அரசு ஊழியர்களை கடனாளியாக்குவதாக உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன்: முதல்வர் ஸ்டாலின், 110 விதியின் கீழ், சட்டசபையில் அறிவித்துள்ள சில அறிவிப்புகள் ஏமாற்றம் அளிக்கின்றன. முதல்வர் உறுதியளித்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதுவரை போராட்டங்கள் தீவிரமடையும்.