சமூகத்தை துண்டாடும் கேடுகெட்ட அரசியல் தமிழகத்தில் எடுபடாது மதுரையில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
சமூகத்தை துண்டாடும் கேடுகெட்ட அரசியல் தமிழகத்தில் எடுபடாது மதுரையில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
ADDED : டிச 08, 2025 02:27 AM

மதுரை: ''சமூகத்தை துண்டாடும் கேடுகெட்ட அரசியல் தமிழகத்தில் எடுபடாது,'' என, மதுரையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.
மதுரை, உத்தங்குடி கலைஞர் திடலில், 417.43 கோடி ரூபாயில், 1.85 லட்சம் பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா அமைச்சர் மூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரவீன்குமார் வரவேற்றார்.
புது விடியல் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இம்மண் பல வரலாற்று அடையாளங்களை கொண்டுள்ளது. மதுரையில் பல்வேறு பாலங்கள், திட்டங்கள் தி.மு.க., ஆட்சியில் தான் நடந்துள்ளன.
தற்போது மதுரையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
கடந்த அவல ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டு, புது விடியலை ஏற்படுத்தி, நாடே திரும்பி பார்க்கும் அளவுக்கு முற்போக்கான மக்கள் நலத்திட்டங்களை நான்கு ஆண்டுகளில் நிறைவேற்றி உள்ளோம்.
இதுபோல் புதுமைப்பெண், நான் முதல்வன் என பல திட்டங்கள் தொடர்கின்றன. இதனால் தான் என்ன செய்வதென தெரியாமல் எதிர்க்கட்சிகள் வயிற்றெரிச்சலில் உள்ளன.
நாம் வளர்ச்சி அரசியலை பேசினால், அவர்கள் வேறு அரசியலை பேசுகின்றனர். என்ன சூழ்ச்சி செய்தாலும் முறியடிப்போம்.
'மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியல்' என்பதை நிரூபிக்கும் வகையில், மதுரையில், 36,660 கோடி முதலீட்டில், 56,000 பேருக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்துள்ளேன். ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன் பா.ஜ., அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை என்னாச்சு?
கீழடி அகழ்வாராய்ச்சியை மத்திய அரசு நிறுத்த முயற்சிக்கிறது. பா.ஜ., ஆளும் மாநி லங்களுக்கு நிதியை கொட்டிக் கொடுக்கிறது, சப்பை காரணங்களுக்காக மெட்ரோ ரயில் திட்டம் வேண்டாம் என்கிறது.
அதே லாஜிக்படி பார்த்தால், பா.ஜ., ஆளும் மாநிலங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு எப்படி ஒப்புதல் கிடைத்தது?
மதுரை மண்ணில் புகுந்து பிரிவினையை உண்டாக்க முடியாது. இதுபோன்ற திட்டப்பணிகள் தொடரும்.
இவ்வாறு நம் சிந் தனைகள் தமிழக வளர்ச்சி குறித்து தான் உள்ளது. ஆனால், சில கட்சிகளுக்கு எப்போதும் கலவர சிந்தனை தான். தேவையில்லாத பிரச்னையை கிளப்பி இடையூறு ஏற்படுத்துகின்றன.
காலம் காலமாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தீபம் ஏற்றுவது போல, டிச., 3ல் மாலை, 6:00 மணிக்கு பால தீபம் ஏற்றப்பட்டது.
அதேநேரம், உச்சிப்பிள்ளையார் கோவில் தீப மண்டபத்திலும் தீபம் ஏற்றப்பட்டது. ஆனாலும், ஒரு கூட்டம் பிரச்னையை கிளப்புகிறது.
ஒரு சிலருடைய அரசியல் லாபத்திற்காக, பிளவுகளை உண்டாக்கி, சமூகத்தை துண்டாடும் சதிச்செயல்களை செய்ய நினைப்பது ஆன்மிகம் இல்லை. அது கேடுகெட்ட மலிவான அரசியல்.
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 1,490க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தி உள்ளோம். இப்படிப்பட்ட அரசை ஆன்மிகத்துக்கு எதிரி என்று சொன்னால் எப்படி?
இடைஞ்சல்கள் வன்முறையை துாண்டிவிட நினைத்தால், 'மதுரை ஸ்லாங்'கில் சொன்னால், 'கலவர கும்பலை பொடதியிலேயே அடிச்சு வெரட்டுவாய்ங்க' என்பதை மறக்க வேண்டாம்.
டில்லி எத்தனை இடைஞ்சல்கள் கொடுத்தாலும், நாம் 'நம்பர் 1' மாநிலமாக உள்ளோம். இதை தாங்கிக் கொள்ள முடியாமல், சதித்திட்டங்களை செய்கின்றனர்.
நீங்கள் எத்தனை பந்துகள் வீசினாலும், நாங்கள் சிக்சர் தான் அடிப்போம். பழைய அடிமைகள், புது அடிமைகளை வைத்து, 'பி' டீம், 'சி' டீம் உருவாக்கலாம். ஆனால், கடைசியில் 'டோர்னமென்ட்'டில் சாம்பியன் நாங்கள் தான்.
வரும் 15ல் மகளிர் உரிமை திட்டத்தில் பயனடையும், 1.14 கோடி பேருடன் சேர்த்து, விடுபட்ட தகுதியான மகளிருக்கும் உரிமை தொகை வழங்க உள்ளோம். பாசக்கார மதுரை மண்ணிலிருந்து உறுதியாக சொல்கிறேன்; 2026லும் திராவிட மாடல் அரசு தான் தொடரும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

