சட்டசபை தேர்தலில் 50 சதவீத ஓட்டு: முதல்வர் ஸ்டாலின் புது 'டார்கெட்'
சட்டசபை தேர்தலில் 50 சதவீத ஓட்டு: முதல்வர் ஸ்டாலின் புது 'டார்கெட்'
UPDATED : ஜூலை 07, 2025 09:38 AM
ADDED : ஜூலை 07, 2025 01:04 AM

வரும் சட்டசபை தேர்தலில், பா.ம.க., - தே.மு.தி.க., ஆகிய கட்சிகளை கூட்டணியில் சேர்த்து, 50 சதவீதம் ஓட்டுகள் பெற்று, 200 தொகுதிகளில் வெற்றி பெற, தி.மு.க., வியூகம் அமைத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
தி.மு.க., 22; காங்., எட்டு; வி.சி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா இரண்டு தொகுதிகளிலும், ம.தி.மு.க., ஒரு தொகுதியிலும், முஸ்லிம் லீக் ஒரு தொகுதியிலும், கொ.ம.தே.க., ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.
இக்கூட்டணிக்கு, கமலின் மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளித்தது. தி.மு.க., கூட்டணி 47 சதவீதம் ஓட்டுகளை பெற்றது. தற்போது, தி.மு.க., கூட்டணியில் ஒன்பது கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், கடந்த 1ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'தி.மு.க., கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இடம் பெற வாய்ப்பு உள்ளது' என்றார்.
அவரது அறிவிப்பு, ராமதாஸ் அணியின் பா.ம.க., - தே.மு.தி.க., ஆகியவற்றுக்கான அழைப்பாக அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகிறது.
தி.மு.க., கூட்டணி தொடர் வெற்றி பெற்று வரும் நிலையில், சட்டசபை தேர்தலுக்கு மேலும் சில கட்சிகளை சேர்க்க முடிவெடுத்ததற்கு, நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க., தான் காரணம் என்று கூறப்படுகிறது.
ஆளுங்கட்சியின் எதிர்ப்பு ஓட்டுகள், இளைய தலைமுறை, புதிய வாக்காளர்கள் ஓட்டுகள் த.வெ.க.,வுக்கு சாதகமாக இருப்பதால், 16 சதவீத ஓட்டுகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக, பல்வேறு சர்வேயில் தெரிய வந்துள்ளது.
எனவே, தி.மு.க., கூட்டணி ஓட்டு சதவீதம் குறைந்து விடக்கூடாது; தேர்தலில் தொடர் வெற்றி பெற்று, இரண்டாம் முறை ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக, மேலும் சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்க தி.மு.க., விரும்புகிறது.
அதேசமயம் எதிர்க்கட்சிகள் கூட்டணி பலம் பெற்று விடுவதை தடுக்கவும், தி.மு.க., கூட்டணியில் ராமதாஸ் அணியிலான பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகளை, சேர்க்கவும், தி.மு.க., தரப்பில் பேச்சு துவக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி என்பது, தி.மு.க.,வின் இலக்கு என்றாலும், அதற்கு 50 சதவீதம் ஓட்டுகளை பெற வேண்டும் என்பதை, மற்றொரு இலக்காக நிர்ணயித்து, தேர்தல் வெற்றி வியூகத்தை தி.மு.க., தலைமை வகுத்துள்ளது.
இது குறித்து, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
கடந்த 2024ம் ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தலில், 47 சதவீத ஓட்டுகளை தி.மு.க., அணி பெற்றது. பா.ம.க., 4 சதவீதம், தே.மு.தி.க., 1 சதவீதம் ஓட்டுகள் பெற்றன. தற்போது, பா.ம.க., ராமதாஸ், அன்புமணி அணி என இரண்டாக பிரிந்துள்ளது.
ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.,விடம் 2 சதவீத ஓட்டுகள், தே.மு.தி.க.,விடம் இருந்து 1 சதவீத ஓட்டுகளை பெற்றால், மொத்தம் 50 சதவீத ஓட்டுகளை பெற்று, தி.மு.க., ஆட்சி அமைத்து விட முடியும்.
ஆட்சியின் எதிர்ப்பு ஓட்டுகள் 5 சதவீதம் கழித்தாலும், 45 சதவீத ஓட்டுகள் பெற்று, ஆட்சி அமைத்துவிட முடியும் என்பது, தி.மு.க., தலைமையின் கணக்காக உள்ளது.
அதனால் தான், ராமதாஸ் அணிக்கு 12 தொகுதிகள், தே.மு.தி.க.,விற்கு குறைந்தபட்சம் ஆறு தொகுதிகள் வழங்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது.
இதற்கான பேச்சும் மூத்த அமைச்சர் ஒருவர் தரப்பில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் அணி வேட்பாளர்களை, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைப்பதற்கும் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -