எந்த மழை வந்தாலும் சமாளிப்போம் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
எந்த மழை வந்தாலும் சமாளிப்போம் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
ADDED : அக் 18, 2024 12:39 AM

சென்னை:''எந்த மழை வந்தாலும், அதை சமாளிக்க அரசு தயாராக உள்ளது,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை கொளத்துார் சட்டசபை தொகுதியில் உள்ள வீனஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வெளியேற்றும் நிலைய செயல்பாடுகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.
அங்கிருந்த பொது மக்கள், மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுத்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். ரெட்டேரி, கொளத்துார் ஏரி உபரிநீர் செல்வதற்கு வசதியாக, 91.3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தணிகாசலம் நகர் கால்வாயை முதல்வர் பார்வையிட்டார்.
புனரமைப்பு பணிகள்
ரெட்டேரியில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் புனரமைப்பு பணிகளையும் முதல்வர் ஆய்வு செய்தார். கொளத்துார் பாலாஜி நகரில் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.
அப்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கொளத்துார் ஜம்புலிங்கம் பிரதான சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், மழை வெள்ள தடுப்பு பணியில் சிறப்பாகச் செயல்பட்ட, 600 துாய்மை பணியாளர்களுக்கு மதிய விருந்து அளித்தார் முதல்வர்.
மட்டன் பிரியாணி, வஞ்சிரம் மீன் வறுவல், சிக்கன் 65, தயிர் பச்சடி, கத்தரிக்காய் தொக்கு, பிரட் அல்வா, தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
துாய்மை பணியாளர்களுடன் அமர்ந்து முதல்வரும் சாப்பிட்டார். அரிசி, மழை கோட், புடவை, பெட் ஷீட், ரஸ்க், பால் பவுடர், மளிகை பொருட்கள் தொகுப்பையும் துாய்மை பணியாளர்களுக்கு முதல்வர் வழங்கினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களுக்கு பிரட், சத்து மாவு, ஆவின் பால் பாக்கெட், 30 முட்டை உள்ளிட்டவற்றையும் முதல்வர் வழங்கினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
மழையை அரசியலாக்க முயற்சி செய்கின்றனர். எவ்வளவு பணிகள் நடந்துள்ளன என்பது மக்களுக்கு தெரியும். மற்றவர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதை அரசியலாக்கி வியாபாரப் பொருளாக்க நினைக்கின்றனர்; அதை நான் விரும்பவில்லை.
எந்த மழை வந்தாலும், அதை சமாளிக்க அரசு தயாராக உள்ளது. தொடர்ந்து பணிகள் செய்து வருகிறோம். மழைக்கால பணிகள் விமர்சனம் குறித்து நான் கவலைப்படவில்லை; மக்கள் திருப்தியாக உள்ளனர்.
கவலைப்படவில்லை
சென்னையில் எங்களுக்கு தெரிந்த எல்லா பகுதிகளிலும் மழை நீர் வடிந்து விட்டது. எங்களுக்கு தெரியாமல் சில இடங்கள் இருந்தால், அவற்றிலும் உரிய கவனம் செலுத்தி, தண்ணீரை அகற்ற முயற்சிகள் எடுக்கிறோம்.
மாநகராட்சி ஊழியர்கள் பணி மிகவும் சிறப்பாக, மக்கள் பாராட்டும் வகையில் இருந்தது. அதற்காக மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், மற்ற துறை ஊழியர்களுக்கு நன்றி.
சமூக வலைதளங்களில் பாராட்டுகள் வருகின்றன. அவற்றை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் விமர்சனம் செய்கின்றனர். அது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. எங்கள் பணி மக்கள் பணி. அதை தொடர்ந்து செய்கிறோம். அரசின் முழு திறனை பயன்படுத்தும் வகையில் மழை இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.