நிதியை நிறுத்தி வைத்து நெருக்கடி... புள்ளி விபரங்களை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
நிதியை நிறுத்தி வைத்து நெருக்கடி... புள்ளி விபரங்களை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
UPDATED : செப் 09, 2024 10:29 AM
ADDED : செப் 09, 2024 10:20 AM

சென்னை: மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் தமிழகத்திற்கு எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தாமதம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
நிறுத்திவைப்பு
அனைவருக்கும் கல்வி (எஸ்.எஸ்.ஏ) திட்டத்திற்கு மத்திய அரசு, மாநிலங்களுக்கு ஒதுக்கிய நிதி குறித்து நாளிதழில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான தமிழகம், கேரளா, பஞ்சாப், மேற்குவங்கம் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. குறிப்பாக, பள்ளிக் கல்வித்துறையின் முக்கிய திட்டமான சர்வ சிக்ஷா அபியானுக்கு போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை.
இதனால், பள்ளிக் குழந்தைகளுக்கான கட்டணம், ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை உருவாகிறது. இதன் காரணமாக, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் நிதி நெருக்கடியில் தவிக்கும் சூழல் உருவாகிறது. இதற்கு முக்கிய காரணமாக, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால், இந்த நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தாராளம்
அதேவேளையில், புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை ஏற்கும் மாநிலங்களுக்கு மட்டுமே தராளமாக நிதி வழங்கப்படுகிறது.
தமிழகம்
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் உள்ள 20 முக்கிய அம்சங்களில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், தமிழகம் 19 அம்சங்களிலும், மேற்கு வங்கம் 15 அம்சங்களிலும்,பஞ்சாப் 12 அம்சங்களிலும், கேரளா 11 அம்சங்களிலும் சிறந்து விளங்குவது தெரிய வந்துள்ளது. ஆனால், இந்த மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், மத்திய அரசின் நிதியை அதிகம் பெற்ற மாநிலங்களான குஜராத் 20 அம்சங்களில் 8ல் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் வெறும் 3 அம்சங்களிலும், பீகார் இரு அம்சங்களில் மட்டுமே சிறந்து விளங்கியுள்ளது.
மக்களின் முடிவுக்கே
இந்த நாளிதழின் செய்தியை சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், 'கல்வி, சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க மறுக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை வலுக்கட்டாயமாக ஏற்க வைக்கும் முயற்சி தான் இது. இப்படியிருக்கும் போது, மத்திய அரசால் சமகல்வி, சமத்துவத்தை எப்படி கொடுக்க முடியும்? இதை நாட்டு மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.