ADDED : ஜன 04, 2024 07:42 AM

கே.விக்னேஷ், ராமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
சமீபத்தில், தே.மு.தி.க., தலைவரும், நடிகருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவால் காலமானார். போலித்தனம் இல்லாத, கள்ளம், கபடமற்ற இயல்பான தன் குணத்திற்காகவும், தன்னலம் கருதாத கொடைத் தன்மைக்காகவும், அவர் எவ்வளவு இதயங்களை வென்றுள்ளார் என்பதற்கு, அவருக்கு இறுதி மரியாதை செலுத்த, கூடிய கூட்டமே சாட்சி.
விஜயகாந்த் ஒரு சகாப்தம். அரசியலில் ஒரு மாற்று சக்தியாக, மாபெரும் தலைவராக வளர்ந்தவரை, சில திராவிட கட்சி ஆதரவு ஊடகங்கள், தங்கள் சுயலாபத்திற்காக, அவரது புகழை கெடுக்கும் வேலைகளில் ஈடுபட்டன.
அத்துடன், அவரால் எம்.எல்.ஏ., ஆன சிலரே, அவருக்கு எதிராக செயல்பட்டனர். மிகுந்த நம்பிக்கைக்கு உரியோராக இருந்தவர்கள், அவருக்கு எதிரணியில் நின்றபோது, மனம் நொந்தே போய் விட்டார். போதாக்குறைக்கு அவரது உயிர் நண்பரான இப்ராஹிம் ராவுத்தரின் மரணமும், அவரை வெகுவாக பாதித்தது.
அந்த துயரத்தில் வீழ்ந்தவர், கடைசி வரை எழவே இல்லை. அவருடைய இமேஜை டேமேஜ் செய்ததில், அ.தி.மு.க., - தி.மு.க.,வின் பங்கு அதிகம். அதேபோல், விஜயகாந்த் இரு பெரும் திராவிட கட்சிகளை எதிர்த்து அரசியலுக்கு வந்தாலும், அவர் அதிகம் விமர்சித்தது, தி.மு.க.,வையும், அதன் குடும்ப அரசியலையும் தான்.
அப்படி இருந்தும், அவரது மரணத்திற்கு சம்பிரதாயத்திற்காக வந்து அஞ்சலி செலுத்தி விட்டு செல்லாமல், அந்த மாமனிதரின் இறப்புக்கு, முதல் ஆளாக வந்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லி சென்றார் முதல்வர் ஸ்டாலின்.
அதோடு மட்டுமல்லாமல், 'விஜயகாந்துக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடக்கும்' என்றும் அறிவித்தார். அனைவரும் அஞ்சலி செலுத்த ஏதுவாக, தீவுத்திடலில் போதிய ஏற்பாடுகள் செய்து, அங்கிருந்து அடக்கம் செய்யப்படும் இடம் வரை நடந்த இறுதி ஊர்வலத்துக்கும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தந்தார்.
கடைசியாக, 72 குண்டுகள் முழங்க நடந்த விஜயகாந்தின் இறுதிச் சடங்கிலும்பங்கேற்று மரியாதை செலுத்தி, தான் ஒரு பகுத்தறிவுவாதி மட்டுமல்ல, 'பக்குவ வாதி' என்பதையும் முதல்வர் ஸ்டாலின் நிரூபித்து விட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை தவிர்த்து, முதல்வரின் இந்த செயல் நிச்சயம் போற்றப்பட வேண்டிய ஒன்று.