ADDED : ஜன 15, 2024 01:53 AM
சென்னை: தமிழக போலீஸ், தீயணைப்பு, சிறைத் துறைகளில் பணிபுரியும் 3,184 பேருக்கு, முதல்வர் பொங்கல் பண்டிகை பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு அறிவிப்பு:
தமிழகத்தில் போலீஸ், தீயணைப்பு, சிறைத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தங்கள் பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்களை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது, முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்படுகின்றன.
நடப்பாண்டு போலீஸ் துறையில் காவலர், முதல் நிலை காவலர், தலைமை காவலர், சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில், 3,000 பேர்; தீயணைப்பு துறையில் முன்னணி தீயணைப்போர், சிறப்பு நிலை அலுவலர், வாகன ஓட்டுனர், தீயணைப்போர் ஆகிய நிலைகளில், 119 பேர்.
சிறைத்துறையில் முதல் நிலை வார்டர்கள், இரண்டாம் நிலை வார்டர்கள் 59 பேருக்கு முதல்வரின் சிறப்பு பதக்கங்கள் வழங்கப்படும்.
இவர்களுக்கு மாதாந்திர படி, 400 ரூபாய் பிப்ரவரி 1ம் தேதி முதல் வழங்கப்படும்.
போலீஸ் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப்பிரிவு, காவல் புகைப்பட கலைஞர்கள் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு நபர்கள் என, ஆறு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு பதக்கம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு, அவர்களின் நிலைகளுக்கு தகுந்தபடி ரொக்கப்பரிசு வழங்கப்படும். பின்னர் நடக்கும் சிறப்பு விழாவில், பதக்கம் மற்றும் முதல்வரின் கையெழுத்துடன் பதக்கச் சுருள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.