ADDED : ஜூன் 21, 2025 01:54 AM
சென்னை:நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 2023 செப்டம்பர் 19 முதல் இதுவரை தலைமை செயலர்களாக பதவி வகித்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான ஷிவ்தாஸ் மீனா, என்.முருகானந்தம் ஆகியோர், ஜூலை 21ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை, சேலம் அரசு போக்குவரத்துக் கழகங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை, தமிழக குடிநீர் வாரியத்தில் பணிபுரிந்து இறந்தவர்களின் வாரிசுகளான நித்யா, கார்த்திகேயன், அஜித்குமார் மற்றும் அன்பரசன் ஆகியோர், தங்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக்கோரி, அரசுக்கு மனுக்கள் அளித்தனர்.
அந்த மனுக்களை பரிசீலிக்குமாறு அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2020ல் வழக்கு தொடர்ந்தனர்.
அதை விசாரித்த உயர் நீதிமன்றம், 'சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு, கருணை பணி வழங்குவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்கவும், மாநில அளவில் இதற்கான பட்டியல் தயாரிப்பது குறித்து பரிந்துரை அளிக்கவும், அதற்கு ஏற்ப சட்டத்திருத்தம் செய்யவும் ஒரு குழு அமைக்க வேண்டும்.
'இக்குழுவிடம் இருந்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை பெற்று, எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என, தமிழக அரசின் தலைமை செயலருக்கு, 2023 செப்., 19ல் உத்தரவிட்டிருந்தது.
இவ்வழக்கு, நீதிபதி பட்டு தேவானந்த் முன், சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது, 2023ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, 'இந்த நீதிமன்றம் 2023 செப்., 19ல் பிறப்பித்த உத்தரவின்படி, இந்த பிரச்னையை சரியான கண்ணோட்டத்தில் ஆராய, எந்த ஒரு குழுவும் அமைக்கப்படவில்லை; அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை.
'நீதிமன்ற உத்தரவை, தலைமை செயலர் பின்பற்ற தவறி விட்டார். அவரின் அணுகுமுறை வேதனை அளிக்கிறது' என்று கூறியதுடன், 2023 செப்., 19 முதல் இன்று வரை தலைமை செயலர்களாக பதவி வகித்தவர்களுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தார்.அதன்பின் நேற்று, நீதிபதி பட்டு தேவானந்த் முன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குவந்தது.
அப்போது அரசு தரப்பில், 'கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்கான கால நிர்ணயம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கவும், கருணை வேலை கோருவோருக்கான மாநில பட்டியல் தயாரிப்பது தொடர்பாகவும், ஜூன், 11ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது' என்று கூறப்பட்டது. அதற்கான அரசாணை நகல் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து, அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்த பிறகே, குழு அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 2023 செப்டம்பரில் பிறப்பித்த உத்தரவை, இவ்வாண்டு ஜூன் 11ம் தேதி வரை அமல்படுத்தாதது, நீதிமன்ற அவமதிப்பு செயலே.நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கும் முன், சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும். அதற்காக, முன்னாள் தலைமை செயலர் ஷிவ்தாஸ் மீனா, தற்போதுள்ள தலைமை செயலர் முருகானந்தம் ஆகியோர், ஜூலை, 21ல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.