"முதல்வர் ஸ்டாலினின் ஏவல் துறையான காவல்துறை": எச்.ராஜா தாக்கு
"முதல்வர் ஸ்டாலினின் ஏவல் துறையான காவல்துறை": எச்.ராஜா தாக்கு
UPDATED : ஜூன் 22, 2024 02:40 PM
ADDED : ஜூன் 22, 2024 12:54 PM

மதுரை: காவல்துறையானது ஸ்டாலினின் ஏவல் துறையாக மாறி உள்ளது என பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்கள் சப்திப்பில் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் விற்பனையை திமுக அரசு தடுக்கவில்லை எனக் கூறி, பா.ஜ., சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது போலீசாருக்கும், பா.ஜ.,வினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தி, பா.ஜ.,வினரை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.
அப்போது நிருபர்கள் சந்திப்பில் எச்.ராஜா கூறியதாவது: உண்மையில் விமர்சனத்தை தாங்கிக்கொள்ள முடியாத கோழை முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் நடப்பதை தடுக்க துப்பில்லாத அரசு எங்களது ஆர்ப்பாட்டத்தை தடுப்பதா?.
சாராய சாம்ராஜ்யம்
லோக்சபா தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்றது மக்களாகிய உங்களை கொல்வதற்கு தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சாராய சாம்ராஜ்யத்தை நிறுவியவர் கருணாநிதி. சாராய சாவுக்கு வித்திட்டவரும் அவரே. அவரை அடுத்து ஸ்டாலினும் தொடர்ந்து அதே வழியில் ஆட்சி செய்கிறார். அதை தடுக்க முயன்ற எங்களை போலீசாரை வைத்து தடுக்கின்றனர். இந்த அரசு வேரோடு அழிக்கப்பட வேண்டும். இந்த அரசு தொடர்ந்து இருந்தால் மக்களுக்கு தான் பாதிப்பு.
ஏவல் துறை
ஸ்டாலின் சர்வாதிகார அரசாக நடந்து கொள்கிறார். போலீசார் மூலம் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றது. போலீஸ் சர்வாதிகாரமாக செயல்படுகிறது. காவல்துறையானது ஸ்டாலினின் ஏவல் துறையாக மாறி உள்ளது. சட்டசபையில் முதல்வர் ஓடி ஒளியவில்லை என்கிறார். ஆனால் ஒரு ஆர்ப்பாட்டத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் அதை தடுத்து நிறுத்துவதன் மூலம் தான் கோழை என்பதை ஸ்டாலின் நிரூபித்து உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.