கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு: தனியார் பள்ளியில் சோகம்
கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு: தனியார் பள்ளியில் சோகம்
UPDATED : ஜன 03, 2025 09:43 PM
ADDED : ஜன 03, 2025 04:13 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் 4 வயது குழந்தை தவறி விழுந்து இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செயின்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளியில் எல்.கே.ஜி., படிக்கும் லியா லட்சுமி என்ற அக்குழந்தை, கழிவுநீர் தொட்டியில் விளையாடி கொண்டிருந்த போது, தவறி உள்ளே விழுந்து உயிரிழந்தது.
காலை 11 மணிக்கு குழந்தை உள்ளே விழுந்த நிலையில், பள்ளி விடும்போது மாலை 3 மணிக்குத் தான் குழந்தையை பள்ளி நிர்வாகத்தினர் தேடியதாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
விசாரணை
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அன்பழகன் கூறுகையில்,' குழந்தை இறந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.
உத்தரவு
குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக, தனியார் பள்ளி இயக்குநர் முத்துபழனிசாமி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
கண்டனம்
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: எல்.கே.ஜி., படிக்கும் குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்வது தனியார் பள்ளியின் கடமையாகும். குழந்தையின் இறப்பிற்கு தனியார் பள்ளி முழு பொறுப்பேற்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் விரும்பதகாத சம்பவம் ஏற்படுத்திய பள்ளியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தையின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், மூன்றரை வயது குழந்தை உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். மூன்றரை வயது குழந்தையின் உயிரிழப்புக் காரணமான தனியார் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் எனக்கூறியுள்ளார்.