ADDED : டிச 20, 2024 12:49 AM

சென்னை:சீனாவில் இருந்து, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட, 1.8 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சீனாவில் இருந்து கன்டெய்னரில், சீனப் பட்டாசுகள் கடத்தி வரப்படுவதாக, சென்னை சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், சில தினங்களுக்கு முன், சென்னை துறைமுகத்துக்கு கப்பல்களில் வந்த கன்டெய்னர்களை கண்காணித்தனர். அப்போது, குறிப்பிட்ட கன்டெய்னர் மீது, அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அதுபற்றி விசாரித்த போது, அவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. அந்த கன்டெய்னர் மீது, 'செயற்கை பூக்கள்' என, ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.
அதைத் தொடர்ந்து, அதிகாரிகள் அதை உடைத்து திறந்து பார்த்தனர். அதன் உள்ளே, 14,000 சீன பட்டாசுகள், 13 பெட்டிகளில் இருந்தன. அதற்கு முறையாக, எந்த அனுமதியும் பெறவில்லை,
இப்பட்டாசுகள் அதிக சப்தத்துடன் வெடித்து சிதறக்கூடியவை. இவற்றின் மதிப்பு, 1.8 கோடி ரூபாய். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.