கவிஞர் வைரமுத்துவின் நுாலை பாராட்டி தமிழில் வீடியோ வெளியிட்ட சீன பெண்
கவிஞர் வைரமுத்துவின் நுாலை பாராட்டி தமிழில் வீடியோ வெளியிட்ட சீன பெண்
ADDED : செப் 11, 2025 02:05 AM

சென்னை:கவிஞர் வைரமுத்து எழுதிய, 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' நுாலை தமிழில் பாராட்டி, சீன பெண் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
கவிஞர் வைரமுத்து எழுதிய, 'வள்ளுவர் மறை, வைரமுத்து உரை' என்ற நுால் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.
இந்நுாலை சீனாவின் யுனான் மின்சூ பல்கலையில், தமிழ்த்துறை தலைவராக பணிபுரியும் கிகி ஹாங் என்பவர் படித்தார்.
தமிழ் மீது பற்றுக் கொண்ட அவர், தன் பெயரை நிறைமதி என தமிழில் சூட்டிக் கொண்டுள்ளார். அவர் வைரமுத்துவின் நுாலை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் பேசியதாவது:
வணக்கம். சீனாவில் இருந்து நிறைமதி பேசுகிறேன். கவிப்பேரரசு வைரமுத்து, 'வள்ளுவர் மறை, வைரமுத்து உரை' எனும் புதிய நுாலை எனக்கு அன்பளிப்பாக கொடுத்தது மகிழ்ச்சி. இந்நுால், கடல், மலைகளை கடந்து, என் கைகளுக்கு வந்தது.
இது, நட்பின் அழைப்பையும், தமிழ் கலாசாரத்தின் சுவையையும் ஏந்தியுள்ளது.
திருக்குறள் தமிழர்களின் அமுத நுாலாகும். உலகளவில் ஞானத்தின் செல்வம். அந்த பாரம்பரியத்தை தொடர்ந்து, வைரமுத்து இயற்றிய 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' எனும் இந்த நுால், ஒரு கலாசார தலைவராக, தமிழ் சமூகத்துக்கு வழிகாட்டும் சீரிய முயற்சியாகும்.
இந்நுால், திருக்குறளின் ஆழ்ந்த கருத்துக்களை தெளிவாகவும், இன்றைய சூழலுக்கு ஏற்பவும், எளிய நடையில் விளக்குகிறது.
தாங்கள் கையொப்பமிட்ட இந்த நுாலை அளித்தமைக்கு மிக்க நன்றி. இந்த சிறப்பான நுாலை, என் மாணவர்கள் அனைவருக்கும் பரிந்துரைத்து, திருக்குறளின் நித்திய ஞானத்தை பகிர்ந்து வளர்ப்பேன்.
தங்களின் இந்த நுால், தமிழர்களின் மொழி மற்றும் கலாசாரத்தை காத்து வளர்க்கும் ஒளி விளக்காக விளங்கும்.
எனக்கு மிகவும் பிடிக்கும் ஒரு குறள், கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக.
இந்த நுால், 'கற்பவற்றை ஒருவன் குற்றமற கற்க வேண்டும்; கற்க வேண்டிய உயர் பொருளை கற்ற பின் அக்கல்வி காட்டும் நன்னெறியில் நிற்க வேண்டும்' என, விளக்குகிறது. இந்த நுாலை படித்து, இது காட்டும் நன்னெறியில் நிற்க வேண்டும். நன்றி.
இவ்வாறு அவர் பேசிஉள்ளார்.