ADDED : அக் 04, 2025 02:07 AM

ஆந்திர மாநிலம், முங்கல வெங்கடபுரத்தின் காப்புக் காட்டில் பொத்தப்பி சோழன் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
சோழர்கள் ஆந்திர பகுதிகளை ஆண்டபோது, பல்வேறு தலைநகரங்களை அதிகார பகுதிகளாக்கி உள்ளனர்.
தலைநகர் அந்த வகையில், கடப்பா மாவட்டத்தில், பொத்தப்பி என்ற ஊரை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள், பொத்தப்பி சோழர்கள் என அழைக்கப்பட்டனர். அவர்களுக்கான சான்றாக, தற்போது, வெங்கடபுரத்தின் காப்புக்காட்டில் பொத்தப்பி சோழன் கல்வெட்டு, மத்திய தொல்லியல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல கல்வெட்டு பிரிவு இயக்குநர் முனிரத்தினம் கூறியதாவது:
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், ராய்ப்பூர் மண்டலத்தில் உள்ள முங்கல வெங்கடாபுரம் எனும் கிராமத்தில் காப்புக்காடு உள்ளது. இங்கு இரண்டு பலகை கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அவற்றில், 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்துகள் பொறிக்கப் பட்டுள்ளன.
தேவதான நிலம் சோழ மன்னர் வீரராஜேந்திர சோழரின் 12வது ஆட்சியாண்டில், அதாவது, 1190ல் இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
அதில், மதுராந்தக பொத்தப்பி சோழ நல்லாசிரசரின் மகனும் உள்ளூர் தலைவனுமான சூரகுமாரனின் ஆட்சிக் காலத்தில், சூரகுமாரன் ராஜ்யம், சிறுகடை நாட்டின் சான்ரூரில் உள்ள தேவதீஸ்வரமுடைய வாலீஷ்வரமுடையார் கோயிலின் சிவபிராமணர்களுக்கு, சகட்டிநாயக்கர் என்ற ஊழியரால், தேவதான நிலம் வழங்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -