ADDED : ஜன 27, 2023 04:42 AM

சென்னை : திரைப்பட சண்டைப்பயிற்சியாளர், 'ஜூடோ' கே.கே.ரத்தினம், 93, வயது மூப்பால் குடியாத்தத்தில் நேற்று காலமானார்.
வேலுார் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்தவர் ரத்தினம். 1959ல் 'தாமரைக் குளம்' என்ற படத்தில் நடிகராக அறிமுகமான இவர், 1966ல் 'வல்லவன் ஒருவன்' படம் வாயிலாக, சினிமாவில் சண்டைப் பயிற்சி இயக்குனர் ஆனார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பலரது படங்களுக்கு, 'ஸ்டன்ட்' இயக்குனராக பணியாற்றி உள்ளார். ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டைக் காட்சி அமைத்துள்ளார்.
கடைசியாக சுராஜ் இயக்கத்தில், சுந்தர்.சி நடித்த 'தலைநகரம்' படத்தில் வில்லனாக நடித்தார்.
தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள ஸ்டன்ட் இயக்குனர்கள் விக்ரம் தர்மா, சூப்பர் சுப்பராயன், தளபதி தினேஷ், ஜாக்குவார் தங்கம், பெப்சி விஜயன் உள்ளிட்ட பலரும் இவரிடம் பணியாற்றி உள்ளனர்.
ரஜினிக்கு மட்டும், 40க்கும் மேற்பட்ட படங்களுக்கு 'ஸ்டன்ட்' அமைத்துள்ளார்.
'ஜூடோ' ரத்தினம், வயது மூப்பால், குடியாத்தத்தில் நேற்று காலமானார். இவரது உடல், இன்று சென்னை, வடபழநியில் உள்ள சண்டைப் பயிற்சி கலைஞர்கள் சங்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
பின், மீண்டும் குடியாத்தம் கொண்டு செல்லப்படுகிறது. நாளை அங்கு இறுதிச் சடங்கு நடக்கிறது.
இவருக்கு பத்மாவதி, கோவிந்தம்மாள் என இரு மனைவியர்; இருவரும் காலமாகி விட்டனர். ஆறு மகள்கள், மூன்று மகன்கள் உள்ளனர். இவரது மறைவுக்கு, திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.