UPDATED : ஜன 01, 2024 01:43 AM
ADDED : ஜன 01, 2024 01:39 AM

''ஓய்வு பெற்றவரை வச்சு, வசூல் பணிகளை கவனிக்கிறாரு பா...'' என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார், அன்வர்பாய்.
''எந்த துறையில, யார் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''பெரம்பலுார் யூனியன் ஆபீஸ், தணிக்கை பிரிவுல இருக்கிற அதிகாரி, உடல்நிலை பாதிக்கப்பட்டு, ஆறு மாத சிகிச்சைக்கு பிறகு, நாலு மாசத்துக்கு முன்னாடி தான் பணிக்கு வந்தாரு பா...
''கையெழுத்து மட்டுமே போட முடியும் நிலையில இருக்கிறவர், 'வேலை செய்ய தகுதியற்றவர்'னு அரசு டாக்டரே சான்றிதழ் குடுத்துட்டாரு... எழுதவோ, பேசவோ முடியாத இவர்...
![]() |
''பஞ்சாயத்துகள்ல, 'ஆடிட்' செய்ற தனது பணியை கவனிக்க, ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் ஒருத்தரை, சம்பளத்துக்கு வச்சிருக்காரு பா...
''அவர் தான், பஞ்., ஆபீஸ்களுக்கு போய், வரவு - செலவு கணக்கு களை தணிக்கை செய்றாரு...
''பஞ்சாயத்துக்கு தலா, 25,000 முதல், 30,000 ரூபாய் வரை, 'கட்டிங்' வசூல் பண்றவர், 'துறையில எந்த பிரச்னையானாலும் நான் பார்த்துக்கிறேன்'னு உத்தரவாதம் குடுத்துட்டு வர்றாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''சித்தார்த்தன், செல்வராஜ் நல்லா இருக்கேளா...'' என, நண்பர்களிடம் விசாரித்த குப்பண்ணாவே, ''நிவாரண பொருட்களை வழங்காம, தங்களுடைய ஆத்துல மொத்தமா பதுக்கிட்டா ஓய்...'' என்றார்.
''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில, மழை, வெள்ளத்தால பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி சார்புல வழங்கும் அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வாங்குறதுக்கு, பெயரளவுக்கு தான் டோக்கன்களை குடுத்திருக்கா ஓய்...
''பொது மக்கள் டோக்கன் கேட்டா, 'அரிசி காலியாகிடுத்து'ன்னு பதில் வருதாம்... அதே மாதிரி, ஆளுங்கட்சியின் தலைமை நிலையம் சார்புல கொடுத்த நிவாரண பொருட்கள்லயும், தலா, 300 பாக்கெட்டுகளை, வட்ட செயலர்கள் பலரும், தங்களது ஆத்துக்கு எடுத்துண்டு போயிட்டா...
''இது பத்தி, ஆயிரம் விளக்கு தொகுதி முக்கிய புள்ளி கவனத்துக்கு புகார் போயும், 'எந்த ஒரு நடவடிக்கையும் இல்ல ஓய்...'' என்றார், குப்பண்ணா.