கோவில் விழா அழைப்பிதழில் ஜாதி பெயர் தவிர்க்கும் சுற்றறிக்கைக்கு தடை
கோவில் விழா அழைப்பிதழில் ஜாதி பெயர் தவிர்க்கும் சுற்றறிக்கைக்கு தடை
ADDED : ஏப் 10, 2025 05:51 AM

மதுரை: கோவில்களின் திருவிழா அழைப்பிதழில் ஜாதி மற்றும் சமூகங்களின் பெயர்களை அச்சிடுவதை தவிர்க்கும் அறநிலையத்துறையின் சுற்றறிக்கைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் நடுவிக்கோட்டை செல்வராஜ் ஏற்கனவே தாக்கல் செய்த மனு:
பட்டுக்கோட்டையில் நாடியம்மன் கோவில் பங்குனித் திருவிழா ஏப்ரலில் நடைபெறும். இதற்கான அழைப்பிதழில் மண்டகப்படிதாரர்களில் அந்தந்த ஜாதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. எங்கள் ஜாதி பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
அச்சிடக்கூடாது
பிப்., 17ல் இரு நீதிபதிகள் அமர்வு கொடுத்திருந்த உத்தரவில், 'வரும் காலங்களில் இக்கோவில் விழாக்களின் அழைப்பிதழில் வெவ்வேறு ஜாதி பெயர்களை அச்சிடக்கூடாது' என்றிருந்தனர். மேலும், இந்த உத்தரவை அனைத்து கோவில் திருவிழாக்களில் நடைமுறைப்படுத்த, இணை கமிஷனர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு அறநிலையத்துறை கமிஷனர் சுற்றறிக்கையாக அனுப்பினார்.
இதை எதிர்த்து ஹிந்து ஆலய பாதுகாப்புக்குழு மாநில பொதுச்செயலர் ஆறுமுக நயினார் தாக்கல் செய்த பொதுநல மனு:
கமிஷனரின் சுற்றறிக்கையின்படி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோவில் மற்றும் பாபநாசம் சுவாமி கோவில் பங்குனி திருவிழா அழைப்பிதழில் மண்டகப்படிதாரர்களின் பெயர்கள் அச்சிடப்படாது என செயல் அலுவலர் வாய்மொழியாக அறிவுறுத்தியுள்ளார்.
அனைத்து கோவில்களிலும் அதை பின்பற்ற பொதுவான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. அதை தவறாகப் புரிந்துகொண்டு கமிஷனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இடைக்காலத் தடை
அம்பாசமுத்திரம் கோவிலில் பல ஆண்டுகளாக உள்ள நடைமுறையை பின்பற்றி பங்குனி திருவிழா அழைப்பிதழில் மண்டகப்படிதாரர்களின் பெயர்களை அச்சிட உத்தரவிட வேண்டும். கமிஷனரின் சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு ஆறுமுக நயினார் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு அளித்த உத்தரவு:
சுற்றறிக்கைக்கு நான்கு வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அம்பாசமுத்திரம் கோவிலில் விழா நடத்தலாம். கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி, நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

